`மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்கக் காரணம் இவர்கள்தான்' - நீட் தேர்வுகுறித்து தமிழிசை பேட்டி

தமிழிசை

``நீட் தேர்வு குறித்து அரசியல்வாதிகள் எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதால் மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்கிறார்கள்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், ``தமிழக மக்களுக்கு ஆக்கபூர்வமான அரசியலை எடுத்துச்செல்லும் பொறுப்பில் தமிழக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் எதிர்மறையான அரசியல் பதிவாகியுள்ளன. நீட் தேர்வு குறித்து அரசியல்வாதிகள் எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதால், மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் நீட் தேர்வு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது.

'காலா' திரைப்படத்துக்கு கர்நாடகாவில் தடை என்பதால், இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியிட்டால் சர்ச்சைகள் வரும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுவது தவறு. தி.மு.க, காங்கிரஸ் கட்சியால் தீர்க்க முடியாத காவிரிப் பிரச்னையை மத்திய அரசு தீர்த்துவைத்துள்ளது. காவிரிப் பிரச்னையை அந்தந்த கட்சிக்குத் தேவையான வடிவத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது. கர்நாடக முதல்வர் குமாரசாமியால் மட்டுமே தண்ணீர் கொடுக்க முடியும் என கமல்ஹாசன் மாயையைத் தோற்றுவிக்க முயல்கிறார்.

கர்நாடகாவில் காவிரிப் பிரச்னை  முடிந்த பிறகு கமல், குமாரசாமியைச் சந்தித்துப் பேசியது தவறு.  குமாரசாமியால் தண்ணீர் கிடைப்பது போன்ற நிலையை உருவாக்குகிறார். இதனால் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழிவுபடுத்துகிறார். எஸ்.வி.சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. பா.ஜ.க சார்பில் பல்வேறு மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் மகளிரணி மாநாடு ஜூலை 22-ம் தேதி நடைபெற உள்ளது'' எனக் கூறினார்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!