வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (06/06/2018)

கடைசி தொடர்பு:15:41 (06/06/2018)

துப்புரவுப் பணிக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! - தட்டிக்கேட்ட கணவனுக்கு தர்ம அடி

   இளம்பெண்

சென்னையில் துப்புரவுப் பணிக்குச் சென்ற இளம் பெண்ணை அநாகரிகமாக காவலரின் உறவினர் பேசியுள்ளார். அதைத் தட்டிக்கேட்கச் சென்ற கணவரும் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். 

சென்னையை அடுத்த பரங்கிமலை கன்டோன்மென்ட் கழகத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றுபவர் கிரிசாமி. இவரின் மனைவி லட்சுமி. இவர், பரங்கிமலை பட்ரோட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் குப்பைகளைச் சேகரிக்கச் சென்றார்.  அங்கு, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஆறுமுகம், வாடகைக்கு இருந்துவருகிறார். ஆறுமுகத்தின் உறவினர் மகேஷ் என்பவரும் அங்கு இருந்துள்ளார். குப்பை சேகரிக்கச் சென்ற லட்சுமிக்கும் மகேஷுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெரிந்ததும் கிரிசாமி அங்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மகேஷ், கிரிசாமியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியானது. மேலும் அப்பகுதி மக்கள், இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், மகேஷை புனித தோமையார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``லட்சுமியின் கணவர் கிரிசாமியைத் தாக்கிய மகேஷிடம் விசாரணை நடந்துவருகிறது. லட்சுமி கொடுக்கும் புகாரின் அடிப்படையில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மாடியில்தான் காவலர் ஆறுமுகம் தங்கியுள்ளார். மாடியில் லட்சுமி குப்பை சேகரிக்கச் சென்றபோது, இங்கெல்லாம் வரக்கூடாது என்றும், சில தினங்களுக்கு முன்புகூட இங்கு செயின் திருட்டுப் போய்விட்டது என்றும் மகேஷ் கூறியுள்ளார். அதை லட்சுமி தட்டிக் கேட்டுள்ளார். இதனால்தான் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தட்டிக்கேட்கச் சென்ற கிரிசாமியை மகேஷ் அடித்துள்ளார். லட்சுமியிடம் அநாகரிகமாக நடந்ததாகவும் தகவல் உள்ளது. இருப்பினும் அவர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்" என்றனர்.