வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (06/06/2018)

கடைசி தொடர்பு:08:47 (07/06/2018)

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கக் காரணம் என்ன?

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கக் காரணம் என்ன?

டந்த நான்கு ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு, விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற்றதே காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

பொறியியல் கலந்தாய்வு

கடந்த 21 ஆண்டுகளாகப் பொறியியல் கலந்தாய்வு ஒற்றைச் சாரள முறையில் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் நேரில் கலந்துகொண்டு அவர்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறையை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. இதில் கலந்துகொள்ள மே 3-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டது. மொத்தம், 1,59,631 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 1,00,214 மாணவர்கள், 59,416 மாணவிகள். இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளின் (83,727) எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டில்  பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,41,115. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 18,500 பேர் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.  

பொறியியல் கலந்தாய்வுக்கு 2014-ம் ஆண்டில் மட்டும் 1.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அதன்பின்பு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை சரியத் தொடங்கியது. 2015-ல் 1,54,238 பேரும், 2016-ல் 1,34,722 பேரும், 2017-ல் 1,41,115 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு மீண்டும் விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பது கல்வியாளர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் பேசினோம். ``இந்த ஆண்டு விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதற்கு போட்டித்தேர்வுகளில் இன்ஜினீயரிங் மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்றிருப்பதாலும் எண்ணிக்கை கூடியிருக்க வாய்ப்புள்ளது. ஒவ்வோர் ஆண்டும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கவனிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

பொறியியல் கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரேண்டம் எண் வெளியிட்ட பின் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ``கடந்த ஆண்டு கவுன்சலிங்கில் 1,82,214 பொறியியல் படிப்புக்கான இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 26 கல்லூரிகள் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளவில்லை என்பதால் நான்காயிரம் இடங்கள் குறைந்து 1,78,139 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு 509 கல்லூரிகளில் கவுன்சலிங்கில் கலந்துகொள்கின்றன.

இந்த ஆண்டு மாணவர்கள் விண்ணப்பித்ததைவிட கல்லூரியில் அதிக இடங்கள் உள்ளதால் விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த ஆண்டு கோவை, மதுரை, திருநெல்வேலியில் உள்ள அண்ணா மண்டல அலுவலங்களில் இளநிலை பொறியியல் படிப்புகள் ஆரம்பிக்க உள்ளதால் 720 இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள 1020 இடங்களும் கூடுதலாகப் பொறியியல் சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகையால், அரசுக் கல்லூரியின் இடங்கள் அதிகரித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 9110 இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1020 இடங்களும், அரசுப் பொறியியல் கல்லூரியில் 4960 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1362 இடங்களும், சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் 34971 இடங்களும், இதர சுயநிதிக் கல்லூரிகளில் 1,26,716 இடங்களும் உள்ளன.

இந்த ஆண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் வரைவோலையைப் பெற்றுக்கொண்டோம். ஆனால், 270 பேர் மட்டுமே வரைவோலையைப் பயன்படுத்தியுள்ளனர்" என்று அதிர்ச்சித் தகவலையும் பதிவு செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜி, "மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களில் யாருக்கு தரவரிசையில் முன்னுரிமை கொடுப்பது என்பதற்காக ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் முதலில் கணித மதிப்பெண்ணும், இரண்டாவது இயற்பியல் மதிப்பெண்ணும், மூன்றாவதாகப் பிறந்த நாள் போன்ற விவரங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தரவரிசைப் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கும், தொலைபேசி எண்ணுக்கும் ரேண்டம் எண்ணும், அவர்கள் எப்போது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விவரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 42 உதவி மையங்களில் நடைபெறும். இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள முடியாதவர்கள் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம்.  

பொறியியல் கலந்தாய்வு

சான்றிதழ் சரிபார்ப்பு பொறியியல் கலந்தாய்வு உதவி மையங்களில் காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.30 மணி வரை நடக்கும். சான்றிதழ் சரி பார்ப்பின்போது, விண்ணப்பத்தின் நகலையும், அந்த நகலில் விண்ணப்பதாரரின் புகைப்படத்தையும் ஒட்டி, புகைப்படத்தின் மீது மாணவரும், அவரது பெற்றோரும் கையெழுத்திட வேண்டும். விண்ணப்பித்தபோது தெரிவிக்கப்பட்ட மூலச் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். விளையாட்டுப் பிரிவில் விண்ணப்பித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும்.

ஜூன் மாதம் நான்காவது வாரத்தில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பொறியியல் கலந்தாய்வு ஆரம்பிக்க வாய்ப்புள்ளது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்