`விஜய்யிடம் கற்றுக்கொள்ளவும்’ - ரஜினிக்கு அறிவுரை சொல்லும் அமீர்

``மக்கள் பிரச்னையை எப்படிக் கையாள வேண்டும் என நடிகர் விஜய்யிடமிருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று இயக்குநர் அமீர் கூறினார்.

அமீர்

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் இறுதிச்சடங்கில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு அஞ்சலிசெலுத்தினார்கள். அப்போது இயக்குநர் அமீர் அஞ்சலி செலுத்திய பிறகு, செய்தியாளர்களிடம் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக, செந்துறை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணை அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி மகாலெட்சுமி வாரன்ட் பிறப்பித்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் அமீர் ஆஜரானார்.

 அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``தமிழகத்தில் பேச்சுரிமையைப் பறிக்க அரசு முயல்கிறது. எங்களைப் போன்றவர்களை அச்சுறுத்தும் வகையில் அவதூறு வழக்கு பதிவுசெய்வதைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. பேச்சுரிமை என்பது சட்டப்படி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காகச் சட்டத்துக்கு உட்பட்டுப் பேசுவதைத் திருத்த வேண்டாம் என இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் நீதிபதி லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதை ஜூனியரான நடிகர் விஜய்யிடம் சீனியரான நடிகர் ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் 13 உயிர்கள் போயிருக்கின்றன. போராட்டத்தில் உயிர்நீத்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லாமல், காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு ஆதரவாகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? நீங்கள் போராடிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களுக்கு எதிராகப் பேசுவதை நிறுத்துங்கள்'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!