`கொலையில் முடிந்த நட்பு' - மலேசிய இளம்பெண்ணைத் தேடும் போலீஸ்  | Police searching for malasiya women in Murder case

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (06/06/2018)

கடைசி தொடர்பு:16:15 (06/06/2018)

`கொலையில் முடிந்த நட்பு' - மலேசிய இளம்பெண்ணைத் தேடும் போலீஸ் 

கொலை

திருச்சி வாலிபர் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வாலிபருடன் தங்கிய மலேசிய பெண் குறித்து கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சென்னை போலீஸார் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கடந்த மே மாதம் 25-ம் தேதி  கண்டெடுக்கப்பட்டது. அந்த வாலிபரின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. அவர் யார் என்று ராயபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாகக் கிடந்தவர், திருச்சியைச் சேர்ந்த விஜயராகவன் என்று தெரியவந்தது. இதற்கிடையில் விஜயராகவனைக் காணவில்லை என்று அவரின் அம்மா நாகவள்ளி திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து விஜயராகவன், குறித்த தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. விஜயராகவன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "திருச்சியைச் சேர்ந்த விஜயராகவன், சில ஆண்டுக்கு முன்பு வேலை தேடி மலேசியா சென்றுள்ளார். அங்கு பூ வியாபாரம் செய்துள்ளார். அப்போது, மலேசியாவில் சூப்பர் மார்க்கெட் நடத்திவரும் நிர்மலா என்பவருடன் விஜயராகவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது, நிர்மலாவின் கணவருக்குப் பிடிக்கவில்லை. இதனால், நிர்மலாவைக் கண்டித்துள்ளார். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜயராகவன் திருச்சிக்கு வந்தார். கடந்த 15-ம் தேதி வெளியில் சென்ற அவர், பிறகு வீடு திரும்பவில்லை. சென்னையில் கடந்த 25-ம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனால் 10 நாளாக அவர் எங்கு இருந்தார் என்று விசாரித்துவருகிறோம். விஜயராகவனின் உடலில் உள்ள காயங்களைப் பார்க்கும்போது கூலிப்படை மூலம் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். இந்தக் கொலைக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை நடந்துவருகிறது. 

இந்தச் சமயத்தில் விஜயராகவன் கொலை வழக்கில் எங்களுக்கு முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. திருச்சியிலிருந்த விஜயராகவன் எப்படி சென்னை வந்தார் என்று விசாரிக்க ஒரு போலீஸ் டீம் திருச்சி சென்றுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் விஜயராகவனுடன் யார் வந்தார்கள் என்ற தகவலைக் கேட்டுப் பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில் தற்போது வழக்கு விசாரணை சென்று கொண்டிருக்கிறது" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "விஜயராகவனைச் சந்திக்க மலேசியாவிலிருந்து நிர்மலா திருச்சிக்கு வந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. விஜயராகவன் மாயமான நாளிலிருந்து நிர்மலா மலேசியாவில் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் நிர்மலா எங்கு இருக்கிறார் என்று விசாரித்து வருகிறோம். அதோடு அவரின் கணவன் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. 
விஜயராகவன் 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மலேசியாவுக்கு அவரை வேலைக்கு அனுப்பியவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. நிர்மலா, மலேசிய சிட்டிசன். இதனால், மலேசியாவிலிருந்து தகவலைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. எங்களின் சந்தேகப் பார்வை நிர்மலா மற்றும் அவர் கணவரின்மீது உள்ளது. 

விஜயராகவனைக் கொன்ற கூலிப்படையினர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. அந்தக் கும்பல் குறித்து விசாரணை நடந்துவருகிறது. இதற்காக விஜயராகவனின் சடலம் கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் விஜயராகவன் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், நிர்மலாவுடன் விஜயராகவன் பழகியதைப் பிடிக்காமல்தான் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதுகிறோம். இருப்பினும் ஒரு டீம், சென்னையிலிருந்து திருச்சிக்குச் சென்றுள்ளது. அந்த டீம், விஜயராகவன் குறித்த முழு விவரங்களைச் சேகரித்துவருகிறது. இதனால், இந்தக் கொலை வழக்கில் உள்ள மர்மங்கள் இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.