ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம், ரெப்போ ரேட் என்றழைக்கப்படுகிறது.  பணவீக்க விகிதத்தைக் கருத்தில்கொண்டு  இந்த வட்டி  விகிதத்தை ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்துவருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின்  கொள்கைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ரெப்போ ரேட்டை 0.25 சதவிகிதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, ரெப்போ ரேட் 6.25 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பண வீக்க விகிதத்தைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் பண வீக்க விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.8 சதவிகிதமாக இருந்தது.  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விளைபொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், பண வீக்க விகிதம் மேலும் அதிகரிக்கக் கூடும். இதைத் தொடர்ந்தே, ரிசர்வ் வங்கி இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நாட்டின் பணவீக்க விகிதம் 4.8 சதவிகிதத்திலிருந்து 4.9 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 66 டாலரில் இருந்து 74 டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் விளைபொருள்களின் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச நிதிச் சந்தையில் நிலவும் மாற்றங்களால், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலதனப் பொருள்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை அதிகரித்துள்ளது. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ரெப்போ ரேட்  விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு, ரிசர்வ் வங்கி கமிட்டியில் உள்ள ஆறு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

ஏற்கெனவே பல வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. ரெப்போ ரேட் உயர்வு காரணமாக வங்கிகள் வீட்டுக்கடன், வாகனக்கடன்  வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. இதனால், வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவற்றின் தவணைக்காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!