`சுப்பிரமணியன் சுவாமிக்கு இது வாடிக்கை!’ - திருமாவளவன் காட்டம்

திருமாவளவன்

``சுப்பிரமணியன் சுவாமி, தமிழர் நலனையோ... போராட்டங்களையோ ஆதரிப்பது கிடையாது. கொச்சைப்படுத்திப் பேசுவதைத்தான் வாடிக்கையாக வைத்திருக்கார்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் காட்டமாகக் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்ததில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த மாணவி பிரதீபா, டெல்லி மாணவன் பர்னா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டது வேதனைக்குரியது. ஒரு மருத்துவப் பணியிடத்திற்கு 12 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. நீட் தேர்வை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி, அந்தந்த மாநில கல்வித் திட்டத்தில் சேர்க்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, நீட் தேர்வு முடிவுகளை அவசர அவசரமாக வெளியிடக் காரணம் என்ன? இதற்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

பிரதீபா போலஅதே மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்தனா தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிற மாநிலங்களிலும் இதே நிலைதான். இதனால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம். மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஆலை நிர்வாகமே திட்டமிட்டு ஒடுக்குமுறையை ஏவியுள்ளது. மக்கள் பேரணியாகச் செல்லும்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் குடியிருப்புகளில் வாகனங்களுக்குத் தீ வைத்து எரித்ததற்கு காவல்துறையே பொறுப்பு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆணையத்தில் பணியில் உள்ள நீதிபதியைக்கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.  சுப்பிரமணியன் சுவாமி தமிழர் நலனையோ, போராட்டங்களையோ ஆதரிப்பது கிடையாது. கொச்சைப்படுத்திப் பேசுவதைத்தான் வாடிக்கையாக வைத்திருக்கார்'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!