வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (06/06/2018)

கடைசி தொடர்பு:19:00 (06/06/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட 3 துணை தாசில்தார்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட 3 துணை தாசில்தார்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

துப்பாக்கி சூடு

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறை டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர்மீது கொலைவழக்குப் பதிவுசெய்யக் கோரிய வழக்கில், மூன்று துணை தாசில்தார்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முத்து அமுதநாதன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல்செய்துள்ள மனுவில், "தூத்துக்குடியில் மே மாதம் 22-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், 50-க்கும் அதிகமானோர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  எனவே, துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள்  தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து, விசாரணைசெய்ய வேண்டும். மேலும் தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறை டி.ஜி.பி., டி.ஐ.ஜி., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர்மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 - ன்படி கொலை வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார்.

துப்பாக்கி சூடு

இந்த மனு, நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது ஆகியோர்கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அளவுக்கு அதிகமான போராட்டகாரர்கள் இருந்ததால், அவர்களின் அருகில் போலீஸார் நெருங்க முடியவில்லை எனக் கூறப்பட்டது. போலீஸார் தூரத்தில் இருந்துதான் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர் எனத் தெரிவித்தனர். "துப்பாக்கி சூடு சம்பவம் துரதிர்ஷ்டமானது. இச்சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர், சந்திரன் ஆகியோர்தான் இச்சம்பவத்துக்கு அனுமதி அளித்திருக்கின்றனர். எனவே, மூன்று துணை தாசில்தார்களையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க உத்தரவிட்டதோடு, மூன்று தாசில்தார்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில், பிறப்பிக்கப்படும் உத்தரவுகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.