வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (06/06/2018)

கடைசி தொடர்பு:19:40 (06/06/2018)

பிரதமர் நிவாரண நிதிக்கு 9 பைசா நன்கொடை! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நூதன போராட்டம்

பிரதமர் நிவாரண நிதிக்கு 9 பைசா நன்கொடை அளித்து, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நூதனமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் எண்ணெய் நிறுவனங்களால் தினசரி மாற்றியமைக்கப்பட்டுவருகின்றன. கர்நாடகத் தேர்தலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக ஏற்றம்கண்டுவந்த விலை, கடந்த சில நாள்களாகக் குறைந்துவருகிறது. இருப்பினும், விலை குறைப்பு என்பது மிகவும் குறைவான அளவிலேயே செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. அதிலும், சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது; கடும் விமர்சனத்தைச் சந்தித்தது. விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார். ஆனால், பெட்ரோல், டீசல் விலைதான் இதுவரை கட்டுக்குள் வந்தபாடில்லை. 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை எதிர்ப்புக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் நூதனமாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் விலை 9 பைச குறைக்கப்பட்ட நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு 9 பைசா நிதி அளித்து, தனது எதிர்ப்பை அவர் தெரிவித்துள்ளார். 9 பைசாவுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அவர் அளித்தார். அவரது பெயர் சந்து கௌட் என்பதும், அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவருவதும் தெரியவந்துள்ளது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌட், `கடந்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83 என்ற உச்சத்தை எட்டியது. இதில், 9 பைசா விலை குறைக்கப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பினால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் 9 பைசாவை திரும்பத் தாருங்கள் என நான் எப்படி கேட்க முடியும்?.
விவசாயிகளின் கஷ்டங்களை அரசுக்குப் புரியவைக்கவே 9 பைசாவை பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க முடிவு செய்தேன். விவசாயப் பணிகளின்போது பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான வாடகைக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடுமையாக உயரும். இதனால், அவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்’’ என்று தெரிவித்தார்.