`ஏழைகளுக்கு இலவச நாட்டுக்கோழி' - 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு!

இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைப் போன்று, இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

முதல்வர் பழனிசாமி

ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டுக்கான மானியக் கோரிக்கை விவாதம், கடந்த 29-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தொடங்கியது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஆரம்பத்தில் சட்டசபையில் விவாதம் சூடுபிடித்தது. இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க வெளிநடப்பு செய்தது. எனினும், திங்கள் முதல் மீண்டும் பேரவை நிகழ்ச்சிகளில் தி.மு.க பங்கேற்றுவருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். 

அப்போது, ``நாட்டுக்கோழியைத் தற்போது அதிக அளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைப் போன்று ஏழைகளுக்கு இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். ரூ.10 கோடி செலவில் தமிழ்நாட்டில் உள்ள 30 கால்நடை நிலையங்களுக்குக் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். திண்டுக்கல், தஞ்சை, வேலூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில், புதிதாக பன்முக கால்நடை மருத்துவக் கூடம் ஏற்படுத்தப்படும். மேலும், சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல மாதவரம் பால்பண்ணை ரூ.100 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!