வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (06/06/2018)

கடைசி தொடர்பு:08:04 (07/06/2018)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா... பேரறிவாளனுக்கு விடிவு காலமா?!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா...  பேரறிவாளனுக்கு விடிவு காலமா?!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அரசு  விடுதலை செய்ய வேண்டும்'' என்றார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார். 

பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு, 26 ஆண்டுகள் கழித்து சென்ற வருடம் 60 நாள்கள் பரோல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பரோல் முடிந்து மீண்டும் பேரறிவாளன் சிறைக்குத் திரும்பிய பிறகு, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் துரிதமடைந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பு விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் கேட்டது. எந்நேரமும் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், அமைச்சரின் விளக்கம் தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளைத் தொடர்புகொண்டு பேசினோம்..     

  அற்புதம்மாள்

`` `விடுதலை செய்வதற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம்தான் இருக்கிறது' என்கிறார் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். சி.வி.சண்முகம்மத்திய அரசு தனது தரப்பு விளக்கத்தைக் கொடுத்தாலே உச்ச நீதிமன்றம் விடுதலை தொடர்பான தனது முடிவை வெளியிடும். ஆனால், மத்திய அரசோ, ‘சி.பி.ஐ. தரப்புதான் இந்த விடுதலை விவகாரத்தில் பதில் கூற வேண்டும்' என்கிறது. தண்டனைக் காலம் இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விடுதலை செய்வதற்கு சி.பி.ஐ. தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரிகளும் நீதிபதிகளுமே தற்போது இந்த விவகாரத்தில் விடுதலையை வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது எதற்குமே செவி சாய்க்காமல் மத்திய அரசு இந்த விவகாரத்தில் அலட்சியப்போக்கில் இருப்பது எதனால்? இது, சட்டத்தை அலட்சியம் செய்வதாக இல்லையா? ராஜீவ் கொலை குற்ற வழக்கில் அரசுதான் சட்டப்படி நடந்துகொள்ளவில்லையே தவிர, குற்றஞ்சாட்டப்பட்ட எங்கள் தரப்பு சட்டப்படிதான் நடந்துவருகிறோம். பரோலில் விடுதலை செய்யப்பட்ட சமயத்தில்கூட ஒருதுளி சட்ட - ஒழுங்கு மீறலும் இல்லாமல் நடந்துகொண்டோம். ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்தப் பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது எதனால் என்று தெரியவில்லை. மேலும், ராகுல் காந்தி 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாகக்  குரல்கொடுத்ததுபோல சோனியா காந்தியும் தமது மௌனம் களைக்கவேண்டும். அந்த நிலையில், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கும். 19 வயதில் சிறைக்குச் சென்ற என் மகனுக்குத் தற்போது 47 வயதாகிறது.என் மகன் வாழவேண்டும்  என்கிற எண்ணம் ஒரு தாயாக எனக்கு இருக்காதா?” என்கிறார் மிகுந்த ஏக்கத்துடன்.

27 ஆண்டுகளாகத் தனது மகனின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் குரல் தழுதழுக்கிறது. குரலுக்குச் செவி சாய்க்குமா மத்திய அரசு?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்