இந்தியாவில் விமான சேவை தொடங்க இருக்கும் கத்தார் ஏர்வேஸ்!

இந்தியாவில் விமான சேவையைத் தொடங்க கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் விண்ணப்பிக்க இருப்பதாக, அந்நிறுவனத்தின் தலைவர் அக்பர் அல் பேக்கர் தெரிவித்திருக்கிறார். 

கத்தார் ஏர்வேஸ்

உடான் (UADAN) திட்டம்மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சேலம், ஓசூர், வேலூர் உள்ளிட்ட நகரங்கள் விமான சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. சேலத்தில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற நகரங்களில் விரைவில் விமான சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் விமான சேவை தொடங்க ஆர்வம்காட்டியுள்ள கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், அதற்காக விரைவில் விண்ணப்பிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது. சிட்னியில் நடைபெற்றுவரும் பன்னாட்டு விமான போக்குவரத்துச் சங்கங்களின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் அக்பர் அல் பேக்கர் தெரிவித்தார். கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அக்பர், பன்னாட்டு விமானப் போக்குவரத்து சங்கங்களின் தலைவராகவும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைக்கான உரிமம் பெற விண்ணப்பிக்க உள்ளதாகத் தெரிவித்த அக்பர், ``இந்தியாவில் தொடங்க உள்ள நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு உள்ளிட்ட பொறுப்புகளில் நிச்சயம் இந்தியர்களே இருப்பர்’ என்று தெரிவித்தார். இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்குவதற்கான விருப்பத்தை கடந்த ஆண்டு பிப்ரவரியில் அக்பர் வெளியிட்டார். இந்தியாவில் குறைந்தபட்சம் 100 விமானங்களையாவது இயக்க வேண்டும் என அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். உலகின் முன்னணி விமான சேவை நிறுவனங்களுள் ஒன்றான கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், உலகின் 6 கண்டங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கிடையில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!