வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/06/2018)

கடைசி தொடர்பு:22:00 (06/06/2018)

பண மதிப்பிழப்பிற்குப் பிறகு பதிவுசெய்யப்படாத நிறுவனங்கள் முதலீடுசெய்த ரூ.24,000 கோடி!

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து வங்கிகளில் ரூ.24,000 கோடி முதலீடு  மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முதலீடு

கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த  2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. பணம் முறைகேடாக தீவிரவாத மற்றும் தவறான நடவடிக்கைகளுக்குச் செல்வதைத் தடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பதிவுசெய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து வங்கிகளில் ரூ.24,000 கோடி முதலீடு  செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், பதிவுசெய்யப்படாத சுமார் 73,000 நிறுவனங்கள் ரூ.24,000 கோடி தொகையைத் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கறுப்புப் பணம் மற்றும் முறைகேடான சொத்துகளை  கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தொழில்ரீதியான செயல்பாடுகள் எதிலும் ஈடுபடாத 2.26 லட்சம் நிறுவனங்களின் பெயர்களை  நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், சட்டத்துக்குப் புறம்பாக பணப் பரிமாற்றம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த 2.26 லட்சம் செயல்படாத நிறுவனங்களில், 1.68 லட்சம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்  பிறகு பணம் வந்துள்ளது. இவற்றில் 73,000 செயல்படாத நிறுவனங்கள் ரூ.24,000 கோடியை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளதாகவும், பல்வேறு வங்கிகளில் தொகைகளைச் செலுத்தியுள்ள இந்த நிறுவனங்கள்குறித்த தகவல்களைத் திரட்டிவருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், 68 நிறுவனங்கள்குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 19 நிறுவனங்களைத் தீவிர மோசடி விசாரணை அலுவலகமும் ( எஸ்.எஃப்ஐ.ஓ), 49 நிறுவனங்களை நிறுவனங்கள் பதிவாளர் அமைப்பும் (ஆர்.ஓ.சி)  விசாரணை மேற்கொண்டுவருகின்றன. நிறுவனங்கள் சட்டப்படி பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களின் அடிப்படையில் எந்த நிறுவனத்தையும் நீக்கும்  அதிகாரம் அரசுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.