வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (06/06/2018)

கடைசி தொடர்பு:21:20 (06/06/2018)

"பணம் இருப்பவர்களுக்கே பதவி" - குமுறும் கோவை ரஜினி ரசிகர்கள்..!

பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கப்படுவதாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி வழங்கப்படுவதாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரங்கராஜ் ரஜினி

ரஜினி மக்கள் மன்றத்துக்கு, மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள், நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது கோவை மாவட்டத்திலும் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரங்கராஜ், “நான் 30 ஆண்டுகளாக ரஜினி ரசிகராக இருக்கிறேன். உதயநிலா ரஜினிகாந்த் என்ற ரசிகர்மன்றத்தை, கடந்த 1991-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறோம். ரஜினி மக்கள் மன்றத்துகாக, பூத் வாரியாக உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தோம். மேலும், தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்கான நிர்வாகிகள் பட்டியலைக் கொடுக்குமாறு என்னிடம்தான் கேட்டார்கள். அதில், எனது பெயர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பட்டியலை கொடுத்தேன்.  பின்னர், நேர்காணல் நடைபெற்றபோதும், ‘நீங்கள் கொடுத்த பட்டியல் ஓ.கே ஆகிவிட்டது’ என்று கூறினர். ஆனால், கடந்த வாரம் வெளியான நிர்வாகிகள் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை.

கோவை மாவட்டச் செயலாளர் கதிர்வேலும், இணைச்செயலாளர் ஜே.பி.சண்முகம் ஆகியோரும்தான் எனது பெயரை நீக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான், சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழுக்கு பேட்டியளித்திருந்தேன். அதையெல்லாம் தலைமையிடம் காட்டி, நான் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து, கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத் தலைமையிடம் கேட்டால், ‘தலைமையைத்தான் கேட்க வேண்டும்’ என்கின்றனர். தலைமையைக் கேட்டால்,’கோவையில் இருந்துதான் லிஸ்ட் கொடுத்தனர். எங்களுக்குத் தெரியாது’ என்கின்றனர். என்னைப் போலவே, 30 ஆண்டுகளாக ரஜினி மன்றத்தில் உழைத்த பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பணம் இருப்பவர்களுக்குத்தான் பதவி வழங்கப்படுகிறது.  ஆனால், நாங்கள் தலைவருக்காக சாகும்வரை உழைப்பதற்குத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதுகுறித்து கருத்து கேட்க, ரஜினி மக்கள் மன்றத்தில் கோவை மாவட்டச் செயலாளர் கதிர்வேலை தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. இணைச்செயலாளர் ஜே.பி. சண்முகத்தைத் தொடர்புகொண்டபோது, “எனக்கும் ரங்கராஜ் என்பவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் கிணத்துக்கடவு தொகுதிக்குதான் பொறுப்பாளர். தலைமையிடத்துக்கு அவர்மீது நிறையப் புகார்கள் சென்றுள்ளன. அவர், பல்வேறு கட்சிகளில் இருந்துள்ளார். மேலும், தொண்டாமுத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சிலர், தங்களது கைப்படவே ரங்கராஜ் மீது புகார் கடிதம் அளித்துள்ளனர். இதனால்தான், அவரது பெயர் நீக்கப்பட்டது” என்றார்.