பள்ளி மாணவி கடத்தலைத் தடுத்த செருப்பு தைக்கும் தொழிலாளி! குவியும் பாராட்டுகள்

தொழிலாளிக்குப் பாராட்டு

திருப்பூர் அருகே, பள்ளி மாணவியை வட இந்திய வாலிபர் கடத்த முயன்ற சம்பவத்தைத் தடுத்துநிறுத்திய செருப்பு தைக்கும் தொழிலாளிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்துக்கு உட்பட்ட தேவனபாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்துவந்தார். அந்தச் சிறுமி, நேற்றைய தினம் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் அந்தச் சிறுமிக்கு பிஸ்கட் சாப்பிடக் கொடுத்து, காங்கேயம் பேருந்துநிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

பின்னர், சிறுமியுடன் பேருந்து நிலையத்துக்குள் வெகுநேரம் நின்றுகொண்டிருந்தவரை, அப்பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியான முருகேசன் என்பவர் கவனித்திருக்கிறார். தொடர்ந்து, அந்த வாலிபரின் நடவடிக்கையைக் கண்டு சந்தேகம் அடைந்த முருகேசன், உடனடியாக காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்து, காவலர்களை அங்கு வரவழைத்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு, அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

 அந்த  வாலிபரின் பெயர் ஜிதேந்தர் என்பதும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. பின்னர், அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் சம்பவத்தைத் தடுத்து நிறுத்த உதவிய செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசனை போலீஸார் வெகுவாகப் பாராட்டினர். மேலும், தொழிலாளி முருகேசனை நேரில் அழைத்துப் பாராட்டிய திருப்பூர் எஸ்.பி. கயல்விழி, அவருக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், வெகுமதியும் அளித்துக் கௌரவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!