வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/06/2018)

கடைசி தொடர்பு:23:00 (06/06/2018)

கரும்பு விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காண 8,500 கோடி - நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

கரும்பு விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள்

சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் காலம் தாழ்த்திவருகின்றன. மேலும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமலும் நாடு முழுவதும் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்காகப் பலகட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்திவந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம், டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தியது. அதில், கரும்பு விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், 8 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 

இதில் 1,200 கோடி ரூபாயில் கரும்பு கொள்முதல் நிலையங்கள் உருவாக்கவும், 4,400 கோடியில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் சர்க்கரை இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்படும் எனவும், ஏற்றுமதிக்கான வரி நீக்கப்படும் எனவும்  மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.