வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (06/06/2018)

கடைசி தொடர்பு:07:52 (07/06/2018)

`தூத்துக்குடிக்கு வாருங்கள்!’ - பள்ளி மாணவியின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி

``நான் கண்டுபிடித்த தானியங்கி நீர் பாய்ச்சும் கருவியைப் பற்றி பிரதமரிடம் விளக்கிக் கூறியது மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் உள்ளது" என தூத்துக்குடி பள்ளி மாணவி ஜீவிதா தெரிவித்தார். 

காணொலிக் காட்சியில் உரையாடும் பிரதமர் மோடி

பள்ளி மாணவர்களின் வித்தியாசமான அறிவியல் கண்டுபிடிப்புகளைக் காணொளி மூலம் பார்த்து, அந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் நிகழ்த்துவது வழக்கம். `அடல் டிங்கரிங் லேப்' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் அவர் கலந்துரையாடி வருகிறார். அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ்  இந்தியாவில் 30 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், தமிழ்நாட்டிலிருந்து  தூத்துக்குடி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வுசெய்யப்பட்டது. 

காணொலிக் காட்சியில் உரையாடும் பிரதமர் மோடி

இப்பள்ளியில் அமைக்கப்பட்ட லேப் மூலம் பிரதமர் மோடி தேர்வுசெய்யப்பட்ட  மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதில், அந்தப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியான ஜீவிதா பெத்துலட்சுமி, தான் வடிவமைத்த 'தானியங்கி நீர் பாய்ச்சும் கருவி'யின் செயல்பாடுகுறித்து பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்தார். இந்தத் தானியங்கி நீர் பாய்ச்சும் கருவி,  விவசாயிகளுக்கு எவ்விதத்தில் பயன்பெறும் என்பதை பிரதமர் மோடி மாணவியிடம்  கேட்டறிந்தார். பிரதமரின் சில கேள்விகளுக்கு ஜீவிதா பெத்துலட்சுமி பதிலளித்ததோடு, தூத்துக்குடிக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

காணொலிக் காட்சியில் உரையாடும் பிரதமர் மோடி

இதுகுறித்து மாணவி ஜீவிதா பெத்துலெட்சுமியிடம் பேசினோம், `` விவசாயத்துக்கு தண்ணீரே ஆதாரமாக உள்ளது. தற்போது  பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை  நிலவிவருகிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாகவும், தேவைக்கேற்ப பயப்படுத்தும் வகையிலும் 'தானியங்கி நீர் பாய்ச்சும் கருவி'யை வடிவமைத்துள்ளேன். இந்தக் கருவி இயங்குவதற்கு தேவையான மின்சாரம்,  சோலார் பேனல்கள்மூலம் கிடைத்துவிடும். இதில் சென்சாரும் அமைக்கப்பட்டுள்ளதால், நிலத்தில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் குறையும்போது, தானாகவே நீர் பாயும். இதனால், தேவைக்கு ஏற்ப மட்டுமே  தண்ணீர் பாய்ச்சப்படும். தண்ணீர் செழிப்புள்ள பகுதிகளிலும் இக்கருவியைப் பயன்படுத்தினால், வீணாகும் தண்ணீரைக் கட்டுப்படுத்தி, தேவைக்குப் பின் மிகுதியான தண்ணீரை சேமித்துவைக்க முடியும். இது, முழுவதும் தானியங்கிக் கருவி என்பதால், கருவியை நேரடியாக இயக்கத் தேவையில்லை. இதன் அமைப்பு, செயல்படும் விதம் ஆகியவற்றை ஒவ்வொரு படிநிலையாக  பி.எம். சாருக்கு விளக்கினேன்.

``விவசாயிகளுக்கு எப்படியெல்லாம் பயன்படும்?" எனக் கேட்டார். அவற்றையும் விளக்கினேன். "எங்கள் பள்ளியில் இதன் மாதிரியை செயல்படுத்தி சோதனை செய்துள்ளோம். இதை நேரில் காண தூத்துக்குடியில் உள்ள எங்கள் பள்ளிக்கு வாருங்கள் சார்..." என்றேன். `சரி, நேரம் கிடைக்கும்போது வருகிறேன். தங்களின் புதுமையான இந்தக் கண்டுபிடிப்புக்கு எனது பாராட்டுகள். இதுபோன்று பயனுள்ள, புதுமையான வடிவமைப்புகள், கண்டுபிடிப்புகள்குறித்து ஆய்வைத்  தொடருங்கள்" எனச் சொன்னார். நமது நாட்டின் பிரதமரிடம் காணொளியில் உரையாடியது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது" என்றார் உற்சாகமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க