வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (06/06/2018)

கடைசி தொடர்பு:16:15 (07/06/2018)

கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாவட்ட நிர்வாகத்தின் ஆக்ஷன்!

கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாவட்ட நிர்வாகத்தின் ஆக்ஷன்!

கரூர் மாவட்டம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குகளை அப்புறப்படுத்தவும், மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் 'ஆக்‌ஷன் பார்ட் - 2' நடவடிக்கையை எடுத்திருக்கிறது. கரூர் நகரை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் அமராவதி ஆற்றில், முதல்கட்டமாக பிளாஸ்டிக்குகளை ஒழிக்கும் தூய்மைப் பணியில் பல்வேறு அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் துணையோடு இறங்கியிருக்கிறார்கள்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருகிலுள்ள அமராவதி ஆற்றங்கரையில் வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுற்றுச்சூழல் மன்றங்கள், கரூர் ரோட்டரி டெக்சிட்டி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து துப்புரவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் இப்பணிகளைத் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே, கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க கரூர் மாவட்ட நிர்வாகம் CMR Bit Plast - Wet Process என்ற ஈரச்செயல் முறையில் பிளாஸ்டிக்குகளை மாத்திரைகளாக்கி, அதில் குறைந்த அளவு தார் சேர்த்து, உறுதியான சாலைகளை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. 

பிளாஸ்டிக் ஒழிப்பு

சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் என்பவர் கண்டறிந்த இந்த பிளாஸ்டிக்கை ஈரச்செயல் முறையில் மாற்றி சாலை போடும் முயற்சியில் இதுவரை மூன்று சாலைகளை அமைத்திருக்கிறது கரூர் மாவட்ட நிர்வாகம். அதோடு, மாவட்டம் முழுவதும் இத்தகைய முறையில் பல்வேறு சாலைகள் அமைக்கவிருக்கிறார்கள். அதற்கு ஏதுவாக, 'மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கரூர் மாவட்டம் முழுவதும் நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குகளை சேகரித்துக் கொண்டு வரலாம்' என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி செயல் அலுவலர்கள், ஆணையர்கள் மூலம் தகுந்த விலை வைத்து எடுத்துக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன்இது இப்படி இருக்க... கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி, சாலை ஓரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க, அடுத்தப் பாய்ச்சலாக 'ஆக்‌ஷன் பார்ட் - 2' நடவடிக்கையை எடுத்திருக்கிறது. கரூரில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளைச் சார்ந்தவர்களும் ஆர்வலர்களும் பல்வேறு கிளப்புகளை ஒருங்கிணைத்து இந்தப் பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் இறங்கியிருக்கிறார்கள். இதன்படி, கரூர் நகரத்தை ஒட்டி ஓடும் அமராவதி ஆற்றில் பிளாஸ்டிக்குகளை ஒழிக்கும் பணியைக் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார். பின்னர், சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வாசிக்க, அதனை அனைவரும் பின்தொடர்ந்து ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவரிடம் பேசினோம்.

 "ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழலைப் பேணிக்காத்திடும் பொருட்டு, ஒரு கருப்பொருளை மையமாகக்கொண்டு இத்தினம் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத மாற்றங்களும், அதனால் மனிதகுலத்துக்கும், புவிக்கும் ஏற்படுகின்ற பாதகமான

விளைவுகளுமே இத்தகைய செயல்பாடுகளைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. இந்த ஆண்டுக்கு நெகிழி மாசுபாட்டை முறியடிப்போம் (Beat the plastic pollution) என்பதைக் கருப்பொருளாகக்கொண்டு பணிகள் (05.06.2018) தொடங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்திலுள்ள நீர் ஆதார மையங்களான குளங்கள், ஏரிகள், வாய்க்கால் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை முதல்கட்டமாக அப்புறப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கான விழிப்பு உணர்வுப் பணிகள் கரூர் மாவட்ட சூழல் மன்ற மாணவ - மாணவிகள், செஞ்சிலுவைச் சங்க மாணவ - மாணவிகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள், சிறப்பு விருந்தினர்கள், தன்னார்வலர்கள், கரூர் நகராட்சிப் பணியாளர்கள் ஆகியோர்களைக்கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கோ கிரீன் என்ற துணிப் பை பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. 

சுற்றுச்சூழல்

சுற்றுசூழல் செயல்பாடுகளைச் செய்ய வேண்டியது குறிப்பிட்ட துறைகள் சார்ந்தது என்பதை விடுத்து, அனைத்துத் துறைகளும், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால், இந்தப் புவியின் அழகை எதிர்கால தலைமுறையினருக்கு  எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், மாணவர்களே தயார் செய்த காகிதப் பைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு சுற்றறிக்கைகளின் அடிப்படையில் நீராதார இடங்களான குளங்கள், ஏரிகள், அணைகள் போன்ற இடங்களிலும், நீர் வழித்தடங்களான ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் போன்ற இடங்களிலும் பிளாஸ்டிக் மாசுப்பாட்டை முறியடிப்பதோடு, மரக்கன்றுகளை நட்டு கரைகளைப் பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கரூர் மாவட்டத்தை வளம் மிகுந்த மாவட்டமாக உருவாக்க நல்ல சுற்றுச்சூழலை உருவாக்கிட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்