வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (06/06/2018)

கடைசி தொடர்பு:07:49 (07/06/2018)

குமரி கடற்கரையை சுத்தப்படுத்திய கூடங்குளம் ஜவான்கள்!

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஜவான்கள், குமரியில் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் குவியக் கூடிய சூரிய அஸ்தமனத்தைப் பார்வையிடும் பகுதியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஜவான்கள், குமரியில் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் குவியக் கூடிய சூரிய அஸ்தமனத்தை பார்வையிடும் பகுதியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுத்தப்படுத்திய ஜவான்கள்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் அமைந்துள்ள வளாகம், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இரவும் பகலும் தொழில் பாதுகாப்புப் படையினர் அணு உலை வளாகத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி, பாதுகாப்புப் பணியை மட்டும் அல்லாமல் பொதுமக்களுக்கு உதவும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, குமரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், அங்குள்ள கடற்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்த முடிவு செய்தனர். 

அதற்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கமாண்டன்ட் துஷார் டி சகாரே தலைமையிலான 60 வீரர்கள் அடங்கிய குழுவினர் குமரி கடற்கரையில் முகாமிட்டனர். கடலோரங்களில் குவிந்து கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் சுத்தம் செய்தார்கள். மேலும், கடலோரத்தில் உள்ள பாறைகளுக்கு நடுவில், கைவிடப்பட்ட நிலையில் கிடந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களையும் அப்புறப்படுத்தினார்கள். 

கடற்கரையை சுத்தம் செய்தல்

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடிய குமரி கடற்கரையில், சூரிய அஸ்தமனத்தை மக்கள் பார்வையிடும் பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்களும், தொழில் பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்து தெரிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.