`தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும்!’ - பீட்டர் அல்போன்ஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்ழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களைப் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களைப் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். 

முதல்வர் வராததற்கு கண்டனம்

நெல்லை மாநகர் மாவட்ட ஐ.என்.டி.யூ.சி சார்பாக பாளையங்கோட்டையில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜ.என்.டி.யூ.சி மாநகர மாவட்டத் தலைவர் உமாபதிசிவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

அந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தார்கள். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சிகிச்சை பெற்று வருபவர்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறியிருக்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் அவர் வராமல் இருப்பது ஜனநாயகத்தில் மன்னிக்க முடியாத குற்றம். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 15-ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி செல்ல இருக்கிறார். அதற்கு முன்பாக அவர் தூத்துக்குடிக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும். அதன் பின்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதலாகவே தமிழகத்தில் தொழில் வளம் முற்றிலும் முடங்கிவிட்டது. 

இப்தார் விழா

விருதுநகர், கோவில்பட்டி, உடுமலைப்பேட்டை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு தொழில்கள், பெரிய தொழில்கள் அடியோடு முடங்கி விட்டன. தமிழ்நாட்டுக்கே வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்த திருப்பூரில் தொழில் அதிபர்கள் தற்கொலை செய்யும் நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் எத்தனை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், இதை தமிழக அரசு கேட்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவோம்’’ எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் பங்கேற்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!