நீட் தேர்வில் தோல்வி..! மற்றொரு தமிழக மாணவி தற்கொலை #neetkills | One More student commits suicide for failed in NEET exam

வெளியிடப்பட்ட நேரம்: 01:50 (07/06/2018)

கடைசி தொடர்பு:07:33 (07/06/2018)

நீட் தேர்வில் தோல்வி..! மற்றொரு தமிழக மாணவி தற்கொலை #neetkills

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் திருச்சியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வு

2018-ம் ஆண்டின் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. அதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கெனவே நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்பவர் விஷம் குடித்து உயிரிழந்தார்.

இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதீபா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல உயிரிழந்த மாணவி பிரதீபாவுக்கு காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், திருச்சியைச் சேர்ந்த சுபஶ்ரீ என்ற மாணவி நேற்று இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தந்தை கண்ணன், அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். அவர், நீட் தேர்வில் 94 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார். விரக்தியில் இருந்த அவர், நேற்று இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கெனவே பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மற்றொரு மாணவியும் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


[X] Close

[X] Close