வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (07/06/2018)

கடைசி தொடர்பு:07:28 (07/06/2018)

சிறுநீரக செயலிழப்பால் உயிருக்குப் போராட்டம் 10 வயது சிறுமி..! உதவிக்கு ஏங்கும் பெற்றோர்

10 வயது சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு, சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சிரமத்தில் உதவிக்காக ஏங்கும் பெற்றோர்.

நீலகிரி மாவட்டம் கூடலுார் அருகே நர்த்தகி, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பூபாலன், சாந்தி தம்பதியரின் ஒரே மகள் பவானி (10). பவானிக்கு பிறவியிலேயே இடது பக்க சிறுநீரகம் இல்லை. 2 வயது நிரம்பும்போது, வலது பக்க சிறுநீரகம் பலவீனமாக உள்ளது தெரியவர, அவளது பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க துவங்கியுள்ளனர். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால், உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் கேரள மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சையைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு கடந்த 6 மாதங்களாக வலதுபுற சிறுநீரகம் செயலிழக்கத் துவங்கி, தன்னை அறியாமல் சிறுநீர் மற்றும் ரத்தம் கலந்து வெளியேறுவதால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறாள். 

இதுகுறித்து சிறுமியின் தந்தை பூபாலன் கூறுகையில், ‛பவானி, பிறக்கும்பாேதே அவளுக்கு இடது சிறுநீரகம் இருக்கவில்லை. அவளது 2-வது வயதில் வலது சிறுநீரகமும் பலவீனமாக உள்ளது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்தோம். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால், கேரள மாநிலத்தில் மேப்பாடி, மஞ்சேரி, கேலிக்கெட் என பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையைத் தொடர்ந்தோம். கூலித் தொழியாக வேலை செய்யும் எனக்கு தனியார் மருத்துவமனைகளில் வைத்து எனது குழந்தைக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவளது வலது சிறுநீரகம் செயலிழக்க, அவளை அறியாமல், சிறுநீர் வெளியேறத் துவங்கி, வீட்டிலே முடங்கிக் கிடக்கிறாள் எங்கள் மகள்.

பவானியின் நிலை குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் 4 மாதங்களுக்கு முன்பு முறையிட்டபோது, 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கொடுத்து, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதியுங்கள். டீன் மற்றும் மருத்துவர்களிடம் பேசுவதாகத் தெரிவித்தார். இரண்டு மாதங்களாக ஊட்டி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்கள், பிறவியிலேயே சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் குணப்படுத்துவது சிரமம் என்று கூறி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அதைத் தொடர்ந்து மீண்டும் எனது குழந்தையை கேரள மாநிலம், மேப்பாடி ‛மீம்ஸ்’ மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, பரிசோதித்த மருத்துவர்கள் இப்பிரச்னையைக் குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர். எனது மனைவியின் தாலியை கூட அடமானம் வைத்து இதுவரை ரூ.2 லட்சம் வரை சிகிச்சைக்காக செலவழித்துள்ளேன். கடந்த 3 மாதங்களாக வேலைக்குக் கூட பாேக முடியாமல், குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்துகொண்டிருக்கிறேன். பவானி நடக்கக் கூடாது, அதிக நேரம் நிற்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நாளை (வியாழக்கிழமை) கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கான பணம் கூட கைவசம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன்' என்கிறார் உடைந்த குரலில்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க