வெளியிடப்பட்ட நேரம்: 04:28 (07/06/2018)

கடைசி தொடர்பு:07:17 (07/06/2018)

சாதி ஒழிப்பை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்..! கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்

கச்சநத்தம் படுகொலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து  ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கடந்த 50 ஆண்டு காலமாக இந்த மக்கள் அடிவாங்கிக் கொண்டே அமைதியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது. ஆதிக்கசாதியினருக்கும் சாதிய அமைப்புகளுக்கும் சாதகமாக பழையனூர் திருப்பாசேத்தி காவல்நிலையம் இருந்திருக்கிறது. பால் சொசைட்டி, கடன் சொசைட்டியெல்லாம் இந்தக் கிராமத்தில் இருந்து ஆதிக்க சாதியினரின் தொந்தரவு தாங்க முடியாமல் ஓடிவிட்டது. அந்த அளவுக்கு அராஜகம் செய்திருக்கிறார்கள் ஆதிக்கசாதியினர். ஆடு, மாடு, கோழி எல்லாம் திருடு போயிவிடுகிறது கேட்டால் அடிக்கிறார்கள்.

இப்பகுதியில் கஞ்சா போதைப்பொருள் விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. வீட்டுக்குள் உட்கார்ந்து டி.வி பார்த்த இளைஞர் சண்முகநாதனை வெட்டியிருக்கிறார்கள். மாடியில் இருந்த சந்திரசேகரை வெட்டியிருக்கிறார்கள். வீட்டுக்குள் இருந்த ஆறுமுகத்தை ரோட்டுக்குக் கொண்டு வந்து வெட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் எதைக்குறிக்கிறது. யாரும் நம்மளை கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அரசு இயந்திரம் ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாக இருக்கிறது என்கிற தைரியம்.

இந்தக் கொலை வழக்கில் அரசு இயந்திரத்தையும் சேர்க்க வேண்டும். சாதிய சக்திகள் சுதந்திரமாக நாட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். சாதி ஒழிப்பை முன்னெடுக்காத வரைக்கும் இதுபோன்ற பிரச்னைகள் தமிழகத்தில் ஒழிக்க முடியாது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் சாதி ஒழிப்பு பற்றி பேச மறுக்கிறார்கள். நான் தமிழன்டானு ஒரு குருப் இருக்கு. இன்னொரு குருப் சாதியினு இருக்கு. தமிழகத்தில் சாதி ஒழிப்பு புரட்சி வரவேண்டும். சாதி ஒழிப்பை அரசாங்கமே முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்ற சாதி வெறியர்கள் நடத்திய படுகொலைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது' என்று ஆவேசமாக தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க