வேலை வாங்கித் தருவதாக பெண்களிடம் நகையைப் பறித்த ஆசாமி..!

நாகர்கோவிலில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வாங்கிதருவதாக கூறி நூதன முறையில் பெண்களிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி நூதன முறையில் பெண்களிடம் நகை பறித்த ஆசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தை ஒட்டியே அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இரண்டு இளம் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்தார்கள். இதைப்பார்த்த ஊழியர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் தங்கள் பெயர் அஞ்சு, கல்பனா என அறிமுகப்படுத்திய பெண்கள் விம்மியபடியே பேசத்தொடங்கினர். ``எங்கள் தோழிகள் மூலம் பழக்கமான அமீர் என்பவர் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக தாலுகா அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.

முதலில் அவர் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டு சிறிதுநேரத்தில் திரும்பி வந்தார். இரண்டாவது மாடியில் உள்ள அதிகாரியிடம் பேசிவிட்டேன். உங்களுக்கு வேலை உறுதியாவிட்டதால் படிவத்தில் கையெழுத்துபோட வேண்டும். நீங்கள் சென்று அதிகாரியை பாருங்கள். அதிகாரியைப் பார்க்கச் செல்லும்போது நீங்கள் அணிந்திருக்கும் நகைகளைப் பார்த்து உங்களைப் பணக்காரர்கள் என நினைத்து வேலை தராமல் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, நகைகளையும் செல்போனையும் என்னிடம் தாருங்கள். கையெழுத்து போட்டுவிட்டு பிறகு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். நாங்களும் நகைகளைக் கழற்றி கொடுத்தோம். இரண்டாவது மாடியில் சென்று பார்த்தபோது அவர் கூறியபடி யாரும் இல்லை. கீழே திரும்பிவந்து பார்த்தபோது அமீரும் இல்லை. திட்டமிட்டு எங்கள் நகைகளை திருடிவிட்டார்" என்று தலையில் அடித்து அழுதனர் அந்த பெண்கள்.

காவல்துறையினர், பெண்களிடம் அமீரின் செல்போன் எண்ணை வாங்கி ட்ரூ காலர் ஆப்பில் சோதித்தபோது ஒரு புகைப்படம் வந்தது. அதுதான் அமீர் என பெண்கள் அடையாளம் காட்டினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க கல்பனாவுக்கு ஒரு தோழி மூலம் அமீர் பழக்கமானதாகவும், கல்பனா கழற்றிக்கொடுத்த அனைத்து நகைகளும் கவரிங் எனவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், அஞ்சு கழற்றிக்கொடுத்த 2 பவுன் செயின் மற்றும் 2 கிராம் கம்மல் ஆகியவை தங்கம் எனவும் கூறப்படுகிறது. எனவே, அஞ்சுவை ஏமாற்றியதில் கல்பனாவுக்கும் பங்கு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!