வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (07/06/2018)

கடைசி தொடர்பு:07:01 (07/06/2018)

வைகோவை சாரைப்பாம்பு என்று வர்ணித்தது ஏன்? நாஞ்சில் சம்பத் புது விளக்கம்!

ம.தி.மு.க-வில் இருந்து விலகியபோது வைகோ-வை சாரைப்பாம்பு என வர்ணித்ததற்கான புது காரணத்தை நாஞ்சில் சம்பத் இப்போது தெரிவித்துள்ளார்.

.தி.மு.க-வில் இருந்து விலகியபோது வைகோ-வை சாரைப்பாம்பு என வர்ணித்ததற்கான புது காரணத்தை நாஞ்சில் சம்பத் இப்போது தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்

ம.தி.மு.க-வில் வைகோவுடன் பயணித்து அ.தி.மு.க, தினகரன் அணி என சென்ற நாஞ்சில் சம்பத், தினகரன் அணியிலிருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிவிட்டார். கட்சி அரசியலை விட்டு விட்டதாகவும், தத்துவ அரசியலை மட்டும் விடவில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது, அவர், வைகோ இருக்கும் திசையில் தலைகாட்ட துவங்கியிருக்கிறார். அதற்கெல்லாம் மேலாக ஸ்டெர்லைட் ஆலையை மூட முக்கிய காரணம் வைகோ மட்டுமே என்ற முழக்கத்தை சில நாள்களாக முன்வைத்தும் வருகிறார். இதனால் நாஞ்சில் சம்பத் மீண்டும் ம.தி.மு.கவுடன் இணைவார் என்ற கருத்து அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து, மீண்டும் மீடியாக்களைத் தன்பக்கம் ஈர்த்த நாஞ்சில் சம்பத் நேற்று குமரிமாவட்டம் மணக்காவிளையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அந்த சந்திப்பில் வைகோவை சாரைப்பாம்பு என பேசியதற்கு புது விளக்கமும் பிறந்திருக்கிறது.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ட்விட்டரில் நான் போட்ட கருத்து இன்று தமிழகத்தில் பேசப்படக்கூடிய செய்தியாக உள்ளது. நான் மீண்டும் கட்சி அரசியலில் வரப்போகிறேன் என்ற அதிர்வலையை அது ஏற்படுத்தி உள்ளது. கட்சி அரசியலில் இருந்து மாறிவிட்டேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் தத்துவ அரசியல் இருந்து விலக முடியாது. தூத்துக்குடி முத்து குளிக்கும் நகரை ரத்தம் கொட்டும் நகராக மாற்றிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் ஆலையை தற்காலிகமாக மூடி விட்டு, ஸ்டெர்லைட் நாயகன் என்று உரிமை கொண்டாடும் அநியாயத்தை கண்டு அந்தக் கருத்தை நான் பதிவிட்டேன். 22 ஆண்டு காலம் இந்த ஆலைக்கு எதிராகப் போராட்டத்துக்கு முகம் தந்தவர், இந்த ஆலை அமைந்தால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே தாமிரபரணி, ஸ்ரீ வைகுண்டம் முதல் தூத்துக்குடி வரை கால்நடையாக நடந்து சென்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர். அதற்காக பழிசுமந்தவர். மக்கள் மன்றத்தில் மட்டுமே அல்லாமல் நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டவர். அவருக்கு அந்த கெளரவம் வரக்கூடாது என்று எண்ணி ஸ்டெர்லைட் நாயகன் என்று இந்தப் போராட்டத்தில் துரும்பைக் கூட தூக்கிப் போடாதவர்கள் சொல்வதைத் தாங்கிகொள்ள முடியவில்லை. உழைப்பவனுக்கு உதையும் உறங்குபவனுக்கு மகுடமும் கொடுப்பதுதான் தமிழகமா?

நாஞ்சில் சம்பத்

என்கிற எண்ணத்தில் என் கருத்தைப் பதிவிட்டேன். தூத்துக்குடி ஆலை நிரந்தரமாக மூடும்போது அதற்கு மக்கள் விழா எடுப்பார்கள். அந்த விழாவுக்கு வைகோ கதாநாயகனாக இருப்பார். ஸ்டெர்லைட் ஆலை நாயகன் வைகோ மட்டும்தான். ம.தி.மு.க-வில் இருந்து விலகியபோது வைகோ-வை சாரைப்பாம்பு என்று வர்ணித்த சம்பத் இப்போது வைகோவை புகழ்பாட காரணம் என்ன என நீங்கள் கேட்கிறீர்கள். வைகோவின் 18 ஆண்டு கால எல்லா போராட்டத்திலும் பயணித்து இருக்கிறேன். அவருடன் நான் பயணிக்க முடியவில்லை என்ற கவலையில் அவரை நான் சாரைப்பாம்பு என வர்ணித்தேன். வைகோவின் உயரத்தை யாரும் எட்ட முடியாது" என்று தெரிவித்தார்.