வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (07/06/2018)

கடைசி தொடர்பு:12:16 (07/06/2018)

`` `அப்பா வாசல்ல நிக்கி... கதவைத் தொற'னு ஜோயல் அழறான்!” - காவலர் ஜெகதீஷ் மனைவி பரிதவிப்பு

ஜோயல்கிட்ட, `அப்பா வெளிநாட்டுக்குப் போயிருக்கு'னு சொல்லி வெச்சிருக்கோம். அவனை வெளியில் தூக்கிட்டுப் போனாலே, `இந்தக் கடையிலதான் அப்பா இட்லி வாங்கித் தரும், இந்தக் கடையிலதான் அப்பா சாக்லேட் வாங்கித் தரும்'னு சொல்லிட்டே இருக்கான்”

காவலர் ஜெகதீஷ் துரை

``ன்னிக்கு எங்க ஊருல ஒரு கல்யாணம். அப்பா, அம்மா அங்கே போயிட்டு வந்ததும், நைட்டு எல்லாருமா ஒண்ணா சாப்பிட்டோம். மணி ஒன்பதரை இருக்கும். மாமா போனுக்கு ஒரு கால் வந்துச்சு. சாப்பிட்டிட்டிருந்த மனுசன், அரக்கப் பறக்க கௌம்பினாங்க. `மாமா, இந்த நேரத்துல எங்கே கெளம்பிட்டீங்க?'னு கேட்டதுக்கு, `ஸ்டேஷன்ல கூப்பிடுறாங்க. ஒரு எட்டு போயி என்னன்னு கேட்டுட்டு சீக்கிரமே வந்துடுறேன்'னு போனாங்க. அதுதான் மாமாவைக் கடைசியா பார்த்தது. எனக்குத் தெரிஞ்சு ஆறு வயசிலிருந்து நானும் அவங்களும் ஒண்ணா சுத்திட்டிருந்தோம். ஒரு நிமிஷம்கூட அவங்க என்னையவிட்டுப் பிரிஞ்சது கிடையாது. இப்போ, என்னைப் பரிதவிக்க விட்டுப்போய் சரியா ஒரு மாசம் ஆகிடுச்சு. மாமா இல்லாத இந்த நாள்கள் நரக வேதனையா கழிஞ்சுட்டிருக்கு” - ஆரம்பித்தது முதலே அழுதுகொண்டே பேசிய மரியரோஸ் மார்கரெட், அதற்கு மேல் பேசமுடியாமல் கதறுகிறார்.

 திருநெல்வேலி மாவட்டம், சிந்தாமணியைச் சேர்ந்த ஜெகதீஷ் துரை, மே மாதம் 6-ம் தேதி இரவு வீட்டிலிருந்து கிளம்பி, மறுநாள் அதிகாலையில் உயிர் நீங்கிய வெற்று உடம்பாகக் கிடைத்தார். தமிழகத்தையே நிலைகுலையச் செய்த இந்தச் சம்பவத்திலிருந்து இன்னும் ஜெகதீஷின் உறவினர்களும் திருநெல்வேலி சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களும் மீண்டபாடில்லை. 

``போதும் தம்பி, இனிமேலும் அவளைத் தொந்தரவு செய்யாதீக. ஒரு நிமிஷம் அழாமல் பேசுனதே பெரிய விஷயம். வாயும் வயிறுமா இருக்குற புள்ளை. அவளை அழவைக்க வேணாம்ங்க” என்ற மரியரோஸின் அக்கா தொடர்கிறார்.

ஜெகதீஷ் துரையின் மனைவி

``என் தங்கச்சிக்கும் கொழுந்தனுக்கும் ஒண்ணாவது படிக்குற வயசிலிருந்தே பழக்கம். எட்டாவது வரை உள்ளூர் ஸ்கூல்ல படிச்சாங்க. அப்புறம் பக்கத்து ஊரில் படிச்சாங்க. காலேஜ் படிக்க ஆரம்பிச்சதிலிருந்தே ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்க. ஆனாலும், அவர் வீட்டுல காதலை ஏத்துக்கலை. பிடிவாதம் பிடிச்சுத்தான் இவளைக் கல்யாணம் பண்ணினாரு. தங்கமான மனுசன். எங்கேயாவது விசேஷத்துக்குப் போகணும்னாலும், `எம் பொண்டாட்டியை நானே கூட்டிட்டுப் போறேன்'னு சொல்வாரு. அப்படிக் கண்ணுக்குள்ளே வெச்சுப் பார்த்துக்கிட்ட மனுசனைத்தான் பாவிப் பயலுங்க அடிச்சே கொன்னுருக்காங்க. அன்னையிலிருந்து ஒரு வாய் சோறு முழுசா சாப்பிடாம பட்டினி கெடக்குறா. வாசலையே பார்த்து `மாமா மாமா'னு பொலம்புறா. அவ பையன் ஜோயலுக்கு மூணு வயசுதான் ஆவுது. ஆனாலும், அப்பா இனிமே இல்லேனு அதுக்குத் தெரியுது. `அம்மா, அப்பாவ எங்கேம்மா? போன் பண்ணி பண்டம் வாங்கிட்டு வரச் சொல்லும்மா'னு அழறான். அவரை கல்லறைக்குத் தூக்கிட்டுப் போகும்போதும், `ஏம்மா அப்பா நடந்து போகாம பெட்டியில போகுது?'னு கேட்டான். போன வாரம்கூட ராத்திரி திடீர்னு கதவைத் தொறக்கச் சொல்லி ஒரே அலறல். `ஏல... எதுக்கு இந்த ராத்திரி நேரத்துல அழுவுறே?'னு கேட்டதுக்கு, `அப்பா வாசல்ல நிக்கி. கையில பண்டம் வெச்சிருக்கு. நீ போய் கதவைத் தெறந்துவிடு'னு அவ அம்மாக்கிட்ட சொல்லி அழறான்.

ஜோயல் அழுகை ஒவ்வொரு நாளும் அதிகமாயிட்டே இருக்கு. ஆனா, `எம் பையன நீங்க ஆளும் பேருமா பாத்துக்கோங்க. நான் மாமா போன எடத்துக்கே போறேன்'னு சொல்லிட்டு இவ தற்கொலை பண்ணிக்கப் பார்த்தா. `வயித்துல புள்ளையை வெச்சுட்டு சாவப்போறியேடி. கடவுள் உன்னை மன்னிப்பாரா? ஆயிரமே இருந்தாலும் புள்ளைகளை பெத்தவ பார்த்துக்கிற மாதிரி வருமா?னு சொல்லி, அவளை சமாதானம் பண்ணியிருக்கோம். திடீர்னு ஒருநாள் கல்லறையில் போய் உட்கார்ந்து அழுதுட்டிருக்கா. அங்கே போகக் கூடாதுன்னு கண்டிச்சதும், அங்கிருந்து மண்ணை அள்ளிட்டு வந்து வீட்டுல வெச்சு அழுறா. `போலீஸ்காரன் பொண்டாட்டி தைரியமா இருடி'னு எல்லோரும் சொல்றாங்க. போலீஸ்காரன் பொண்டாட்டி அழக்கூடாதா? அவளுக்கும் உணர்ச்சி இருக்குதுல்ல” - கண்ணீரால் குரல் தடுமாறும் மரிய வளர்மதி, சில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்கிறார்.

ஜெகதீஷ் உடலுக்கு வீர அஞ்சலி

``அவர் இறந்துபோன சோகத்துல குடும்பமே ஒடைஞ்சு உட்கார்ந்திருக்கு. மறுநாளே எல்.ஐ.சியிலிருந்து வந்து, `உங்க வீட்டுக்காரர் ஹோம் லோன் வாங்கியிருந்தாங்க. அதுக்கான பணத்தை உடனே கட்டணும்'னு சொல்லிட்டாங்க. அரசாங்கத்துல 1 கோடி ரூபாய் நிதி உதவியும் தங்கச்சிக்கு டீச்சர் வேலையும் கேட்டிருந்தோம். ஆரம்பத்துல செய்யுறோம்னு சொல்லிட்டு, 10 லட்சம் மட்டும் கொடுத்துட்டு அமைதியா இருக்காங்க. அந்த 10 லட்சத்துல 9 லட்சம் வீட்டு லோனுக்கே போயிடுச்சு. டீச்சர் வேலை கேட்டால், போலீஸ் ஸ்டேஷன்லதான் வேலை கொடுப்போம்னு அதிகாரிங்க சொல்றாங்க. எம்.காம், பி.எட் முடிச்சுட்டு போலீஸ் ஸ்டேஷன்ல என்ன வேலை பார்க்கிறது? போலீஸ் ஸ்டேஷன்னாலே இப்போ ரொம்ப பயப்பட ஆரம்பிச்சுட்டா. `வேற வழியில்லே. கிடைக்கும் வேலைக்குப் போய் புள்ளை குட்டிகளை காப்பாத்து'னு சொல்லியிருக்கோம். அதுக்குக்கூட சீக்கிரமா ஒரு ஏற்பாடு பண்ண மாட்டேங்கிறாங்க. அரசும் அதிகாரிகளும் காலம் கடத்தாம சீக்கிரமே என் தங்கச்சிக்கு ஒரு நல்லது பண்ணனும். ஜோயல்கிட்ட, `அப்பா வெளிநாட்டுக்குப் போயிருக்கு'னு சொல்லி வெச்சிருக்கோம். அவனை வெளியில தூக்கிட்டுப் போனாலே, `இந்தக் கடையிலதான் அப்பா இட்லி வாங்கித் தரும், இந்தக் கடையிலதான் அப்பா சாக்லேட் வாங்கித் தரும்'னு சொல்லிட்டே இருக்கான்” எனக் கலங்குகிறார் மரிய வளர்மதி.

ஜோயல் விரைவில் வளர்ந்து நிற்பான். அப்போது, `தன் தந்தை மணல் திருட்டைத் தடுப்பதில் நேர்மையாக நின்றதால் பலியானவர். தனி ஆளாகச் சென்று குற்றத்தைத் தட்டிக் கேட்டு வீர மரணமடைந்தவர்' என்ற உண்மை தெரியவரும். ஆனாலும், யார் கண்டது, அவனும் காவல்துறையில் சேர்ந்து குற்றத்துக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி நிற்கலாம். அவனுக்காக இந்த அரசு விரைந்து செயல்பட்டு, ஜெகதீஷ் துரையின் மரணத்துக்கு நியாயம் வழங்கட்டும். 


டிரெண்டிங் @ விகடன்