பியூகோ எரிமலை வெடித்துச் சிதறியதன் எதிரொலி - 99 பேர் பலி, 192 பேர் மாயம்

கவுதமாலா, பியூகோ எரிமலை வெடித்துச் சிதறியதில் பலி எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

கவுதமாலா

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவில் பியூகோ (Fuego) எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை, கடந்த ஜூன் 3-ம் தேதி திடீரென்று வெடித்துச் சிதறியதால் நதிபோல ஓடிய எரிமலைக் குழம்பு, அருகில் அமைந்துள்ள எல்-ரோடியோ கிராமத்தில் புகுந்தது. அதனால், வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தது. மேலும், கிராம மக்கள் பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. எரிமலை வெடிப்பினால் 10 கிமீ தொலைவுக்கு வெறும் சாம்பல் புகை மண்டலங்கள் மட்டுமே காணப்பட்டன.

எரிமலை வெடித்தன் எதிரொலியாக கடந்த சில நாள்களாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 192 பேர் காணவில்லை என கவுதமாலாவின் தேசிய பேரழிவு ஒருங்கிணைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்கள் வெளியேறத் தொடங்கியதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பலர் இந்த இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

எரிமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். எரிமலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!