பா.ஜ.க-வை விளாசிய ராகுல் காந்தி - வரிக்கு வரி பதிலளித்துள்ள அருண் ஜெட்லி | Finance minister Arun Jaitley hits back at Rahul Gandhi's comment

வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (07/06/2018)

கடைசி தொடர்பு:09:28 (07/06/2018)

பா.ஜ.க-வை விளாசிய ராகுல் காந்தி - வரிக்கு வரி பதிலளித்துள்ள அருண் ஜெட்லி

மத்திய அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை வைத்துள்ள ராகுல் காந்தியின் கருத்துக்கு விளக்கமளித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அருண் ஜெட்லி

மத்திய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, மத்திய பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ராகுலின் கருத்துக்கு வரிக்கு வரி விளக்கமளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் 15 பேருக்குப் பிரதமர் கடன் தள்ளுபடி செய்துள்ளதாக ராகுல் குற்றம்சாட்டியுளார். ஆனால், அப்படி ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. நீரவ் மோடி கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஊழலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

2011-ம் ஆண்டு காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. நீரவ் மோடியின் ஊழலை தற்போது பா.ஜ.க அரசு கண்டுபிடித்துள்ளது. பா.ஜ.க, தொழிலதிபர்களுக்குத்தான் அதிகம் கடன் வழங்குகிறது விவசாயிகளுக்கு வழங்குவதில்லை என ராகுல் கூறியுள்ளார், உண்மையில் காங்கிரஸ் அரசுதான் அவ்வாறு செய்தது. அவர்கள் தொழிலதிபர்களுக்கு அளித்த கடன் பிற்காலத்தில் வாராக்கடனாக மாறியது. அதை வசூலிக்க தற்போது பா.ஜ.க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.” என்று கூறியுள்ளார். இதுபோன்று ராகுல் கூறிய அனைத்துக் கருத்துக்கும் பதில் அளித்து அருண் ஜெட்லி பதிவிட்டுள்ளார்.