வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (07/06/2018)

கடைசி தொடர்பு:10:08 (07/06/2018)

விறுவிறுப்பாகத் தயாராகும் ஆர்.எஸ்.எஸ் சிறப்புக் கூட்டம் - எதிர்ப்பை மீறி நாக்பூர் சென்ற பிரணாப் முகர்ஜி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி வகுப்பு நிறைவு விழா இன்று நாக்பூரில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸின் எதிர்ப்பை மீறி பிரணாப் முகர்ஜி அந்த நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார். 

ஆர்.எஸ்.எஸ்

மகாராஸ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் பின்னணி கொண்ட பிரணாப், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அழைப்பை ஏற்றது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என பிரணாப் முகர்ஜியைக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ள நாக்பூர் வந்தடைந்தார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஆர்.எஸ்.எஸ்

முன்னதாக காங்கிரஸின் எதிர்ப்புக்குக் கருத்து தெரிவித்திருந்த பிரணாப் முகர்ஜி   ``நான் என்ன சொல்ல வேண்டுமோ, அதை நாக்பூரில் சொல்வேன்.” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று அவர் கலந்துகொள்ள உள்ள கூட்டத்தில் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.