மது ஒழிப்பு பற்றி ரஜினி, கமல் பேசுவதில்லை - மது ஒழிப்பு இயக்கம் குற்றச்சாட்டு

மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் இடம்பெற வேண்டும்

மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் இடம்பெற வேண்டும் என தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில அளவிலான  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

மதுரையில்  வழக்கறிஞர் சி.சே. இராசன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பேசிய அவர், ``தமிழக மக்கள், பூரண மதுவிலக்கை முன் வைக்கும் கட்சிகளை அடையாளம் கண்டு ஆதரிக்க வேண்டும். புதிதாக அரசியலில் ஈடுபட்டுவரும் நடிகர்கள் ரஜினி, கமல் போன்றவர்கள் பூரண மதுவிலக்கு குறித்து பேசுவதில்லை அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மூடிய டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக மக்கள் நலன் கருதி மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

ரஜினி, கமல்

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் சட்டத்துக்குப் புறம்பாக மதுவிற்பனை காவல்துறையின் மறைமுக ஆதரவுடன் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. அரசு இவர்கள் மேல் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் மூலமான வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் அரசு தெரிவித்துள்ளது. இந்த இழப்பு என்பது மொத்த டாஸ்மாக் வருமானத்தில் ஒரு சதவிகிதம் மட்டுமே. தமிழகத்தில் இயங்கும் பார்கள் மூடப்பட வேண்டும். 40 சதவிகிதம் பேர் பார்களில் தான் குடிக்கிறார்கள். மாணவர் தினேஷ் தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் தன்னையே மாய்த்துக்கொண்டான். அரசு அதைக் கவனத்தில் கொண்டு மதுப்பழக்கத்துக்கு எதிராக பெற்றோர்களிடம் விழிப்பு உணர்வு உருவாக்க வேண்டும். இதைப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின்போது வலியுறுத்தவேண்டும்.  மது, போதைப் பொருள்கள் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் இடம்பெற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடிநோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவமும் மறுவாழ்வு மையங்களும் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்” எனக் கூறினார். 


இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில பெண்கள் இயக்கம், தேன்சுடர் பெண்கள் இயக்கம், சமம் குடிமக்கள் இயக்கம், சுவாதி பெண்கள் இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் சட்ட உரிமை இயக்கம், சுய ஆட்சி  இயக்கங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!