திருச்சி மாணவியின் உயிரைப் பறித்த நீட்: தொடரும் தற்கொலைகள்

`நீட் தேர்வு என்னைப் போன்ற பல ஏழை மாணவர்களின் கனவை கலைக்கும்' என நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அனிதா ஊடகங்களுக்கு முன் கதறினார். இன்று அவர் இல்லை. கடந்த வருடம் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய அனிதா இறுதியில் வழியில்லாமல், தற்கொலை செய்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் நீட் தேர்வில் பல குளறுபடிகள் இருந்தது. தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களில் தேர்வு எழுத மையங்கள் ஒதுக்கப்பட்டன. அடுத்த அதிர்ச்சி என்னவென்றால் தமிழகம் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 34-வது இடம் பெற்றது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, 12-ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

சுபாஶ்ரீஇந்த மரணம் தமிழகத்தைப் பெரும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. அதிலிருந்து மீளுவதற்குள் திருச்சி மாணவி சுபஸ்ரீ என்பவர் நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டது அந்த மாநகரையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்துள்ள உத்தமர்சீலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளைத் தலைவராகவும் இருக்கும் இவரது மகள் சுபஸ்ரீ, மருத்துவராக வேண்டும் என்கிற கனவில் இருந்தார். திருச்சி மாவட்டம் துறையூர் சவுடாம்பிகா மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த இவர், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்றார். மதிப்பெண் குறைந்தாலும் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால் மருத்துவராகிவிட முடியும் என நினைத்த சுபஶ்ரீ திருச்சியில் இயங்கிவரும், கேர் நீட் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சியும் பெற்று நீட் தேர்வு எழுதினார்.

ஆனாலும் ‘நீட்’ தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை. நீட் தேர்வில் 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். தனது மருத்துவர் கனவு தகர்ந்து போனதால் கடந்த சில தினங்களாகவே பெற்றோரிடம் பேசாமல் தனிமையில் இருந்து வந்த சுபஸ்ரீ, வேதனையைத் தோழிகளிடம் கூறிப் புலம்பியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு பெற்றோர், கோயிலுக்குச் சென்றிருந்ததாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த சுபஸ்ரீ, இரவு 10 மணி அளவில் தனது அறையில் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கியுள்ளார். இதையறிந்த சுபஶ்ரீயின் பெற்றோர், கதறியழவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சுபஶ்ரீயை மீட்டு திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சுபஸ்ரீ உயிரிழந்துவிட்டதாகக் கூறவே, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியழுதனர்.

தகவலறிந்த கொள்ளிடம் டோல்கேட் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுபஶ்ரீ மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அவரின் உடல் திருச்சி ஶ்ரீரங்கம் மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுபஶ்ரீ மிக சுட்டித்தனமானவும், கலகலப்பாகவும் இருப்பாராம். அப்படிப்பட்ட மாணவி நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!