வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (07/06/2018)

கடைசி தொடர்பு:11:39 (07/06/2018)

` விலங்கு மாட்டியும் வின்ஸ்டார் சிவக்குமார் திருந்தல!' - சேலம் போலீஸ் மீது அதிர்ச்சிப் புகார்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த வின்ஸ்டார் நிறுவனத்தின் மோசடியைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'பொதுமக்களை ஏமாற்றும் வின்ஸ்டார் நிறுவனத்துக்கு ஆதரவாக பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரும் செயல்படுகின்றனர்' எனக் குற்றம் சாட்டுகின்றனர் சி.பி.ஐ கட்சியினர். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, `` குறைந்த விலையில் வீட்டுமனை பெற்றுத் தருவதாகவும் கொடுக்கும் பணத்துக்கு ஆறு மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாகவும் வின்ஸ்டார் நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் மீது புகார் கொடுக்க வரும் பொதுமக்களை போலீஸார் மிரட்டி அச்சுறுத்துகின்றனர். இந்த வழக்கு, சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு 7 மாதங்களாகியும் குற்றவாளியிடம் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் பட்டியலை கோவை நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்யவில்லை.

இந்த மோசடிக்குப் போலீஸார் துணை போகிறார்கள். சிறைக்குச் சென்று வெளியே வந்த பிறகும் வின்ஸ்டார் சிவக்குமார் தொலைக்காட்சி நேரலைகளில் பேசி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். அந்த மோசடி விளம்பரங்களைத் தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோசடியால் மூன்றாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். வின்ஸ்டார் சிவக்குமாருக்குப் பின்புலமாக ஆளுங்கட்சியினரும் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இனியும் வின்ஸ்டார் மீது சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்துவோம்'' என்றார் கொதிப்புடன்.