' 13 பேர் மரணத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்!' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு

' ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்' என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தெரிவித்துள்ளார். 

'ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்' என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற அமைதிப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, 'ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது' என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதன்பின்னரே, உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ள முன்வந்தனர் பாதிக்கப்பட்டவர்கள். 

இந்நிலையில், 'இன்னும் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காகக் காத்திருக்கிறோம். ஆலை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என ஸ்டெர்லைட் ஆலையின் சி.இ.ஓ., ராம்நாத் நேற்று தெரிவித்துள்ளார். இதற்குத் தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

ராம்நாத்தின் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன், " மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசும்போது, 'ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை' எனப் பேட்டியளித்தார். ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகி பிரேம்குமாரும், ' ஸ்டெர்லைட் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை' எனக் கூறினார். மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு பூட்டு போடும் நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளது மாநில அரசு. இதனால் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பாகவே தெரிகிறது. மீண்டும் ஆலை திறக்கப்படும் என ராம்நாத் கூறியிருப்பது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதாக அரசு கூறுகிறது. ஆனால், மக்களின் மனதில் இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை.

மக்களின் உணர்வை முழுமையாக மதிக்கும் அரசு எனக் கூறி வருவது உண்மை என்றால், அமைச்சரவையைக் கூட்டி ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றத் தயங்குவது ஏன்? ஆலைக்கு எதிரான, முழுமையான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றினால் ஆலையை மீண்டும் திறக்க முடியாது. மத்திய அரசும் மாநில அரசும் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன. சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; ஆலையில் உள்ள இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும்; அதன் கழிவுகள் மண்ணை விட்டு முழுமையாக அகற்றப்பட வேண்டும் இதுதான் மக்களின் கோரிக்கை.  மீண்டும் ஆலையைத் திறக்க முயன்றால் மக்களின் கடுமையான போராட்டங்கள் நடக்கும். ஸ்டெர்லைட் திறக்கப்பட்டால், 13 பேர் வீரமரணத்தைத் தழுவியதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும்" என்றார் ஆவேசத்துடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!