வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (07/06/2018)

கடைசி தொடர்பு:12:34 (07/06/2018)

`என்னைத் தேட வேண்டாம் -  நீட் தேர்வால் மாயமான சென்னை மாணவி 

மாணவி


 நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் வீட்டை விட்டு சென்னை மாணவி, வெளியேறியுள்ளார். அவரை பீகாரில் போலீஸார் கண்டுப்பிடித்துள்ளனர். 

சென்னை, புரசைவாக்கம், நம்மாழ்வார்பேட்டை, ரெட்டி காலனியைச் சேர்ந்தவர் ராமர். கூலித் தொழிலாளி. இவரின் மகள் கோட்டீஸ்வரி. கடந்த 2017-ம் ஆண்டு ப்ளஸ் டூ முடித்த இவர், மருத்துவராகும் லட்சியத்தோடு படித்தார். ஆனால், நீட் தேர்வால் கடந்த ஆண்டு கோட்டீஸ்வரிக்கு மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் ஒராண்டாக நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்றார். இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை அவர் எழுதினார். தேர்வு முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது. தேர்வு முடிவைப் பார்க்க கோட்டீஸ்வரி, வீட்டை விட்டு வெளியில் சென்றார். பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரின் செல்போன் நம்பருக்குத் தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ராமர், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, விசாரணை நடத்தி மாயமான மாணவி கோட்டீஸ்வரியைத் தேடினார். 

 இந்த நிலையில், மாணவியின் செல்போனிலிருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு இருந்தது. அதில் நான் வெளியேறுகிறேன்...என்னைத் தேட வேண்டாம். நான் செல்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தகவலும் போலீஸாரிடம் கோட்டீஸ்வரியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மாணவி எங்கு இருக்கிறார் என்று அவரின் செல்போன் டவர் மூலம் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரின் செல்போன் டவர் கடைசியாக சிக்னல் காட்டியது. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாணவியை போலீஸார் தேடினர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். 

அப்போது மாணவி கோட்டீஸ்வரி, வடமாநிலத்துக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவியை போலீஸார் பின்தொடர்ந்தனர். பீகாரில் தன்னந்தனியாக இருந்த மாணவியை போலீஸாரும் அவரின் பெற்றோரும் மீட்டனர். அப்போது, கோட்டீஸ்வரியைப் பார்த்து அவரின் குடும்பத்தினர் கதறியழுதனர். தொடர்ந்து அவரிடம் அன்பாகப் பேசி சென்னைக்கு அழைத்து வந்தனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவி கோட்டீஸ்வரி அனுப்பிய எஸ்.எம்.எஸ். மூலம்தான் அவரை கண்டுபிடிக்க முடிந்தது. அந்த எஸ்.எம்.எஸ் தகவலில் ரயிலில் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் எங்களின் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தோம். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாணவி கோட்டீஸ்வரி இருப்பதை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டறிந்தோம். இதனால் வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் தேடினோம். பீகாரில் அவர் இருக்கும் தகவல் கிடைத்ததும் அவரை மீட்டுவிட்டோம். நீட் தேர்வால் அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டும் மருத்துவராக முடியவில்லை என்ற மனஅழுத்தத்தில் அவர் இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு கவுன்சலிங் கொடுத்துள்ளோம். துரிதமாக செயல்பட்டதால் மாணவி கோட்டீஸ்வரியை உயிரோடு மீட்டுவிட்டோம்" என்றனர். 

 மாணவியின் அப்பா ராமர் போலீஸாரிடம், ``என்னுடைய மகள் உயிரோடு இருப்பதற்கு நீங்கள்தான் காரணம். உடனடியாக நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு விட்டீர்கள்'' என்று கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளார். கோட்டீஸ்வரி மீட்கப்பட்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மாணவியை மீட்ட போலீஸாரை கமிஷனரும் வெகுவாகப் பாராட்டினார். தொடர்ந்து மாணவி கோட்டீஸ்வரியிடம் பீகார் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 ஏற்கெனவே நீட் தேர்வால் அனிதா, பிரதீபா என இரண்டு மாணவிகளை தமிழகம் இழந்துள்ளது. சென்னை மாணவி கோட்டீஸ்வரி, நீட் தேர்வால் விபரீத முடிவை எடுப்பதற்கு முன்பு போலீஸார் அவரை மீட்டுவிட்டனர்.