வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (07/06/2018)

கடைசி தொடர்பு:12:31 (07/06/2018)

`ஃபேஸ்புக்கில் காலாவை லைவ் செய்ததற்கு நன்றி!' - கலகலத்த இரஞ்சித் #Kaala

`இன்று வெளியாகியுள்ள `காலா' திரைப்படம் ரஜினியின் அரசியல் வருகைக்கானது இல்லை, அது மக்களுக்கானது' என இயக்குநர் பா.இரஞ்சித் கூறியுள்ளார்.

ரஞ்சித்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `காலா'. நடிகர் ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை வெளியிட்ட பின் முதன் முதலில் இந்தப் படம் வெளியானதால் இதன் மீதான சர்ச்சைகள் வலுத்துக்கொண்டே சென்றன. காவிரிப் பிரச்னை தொடர்பாகத் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி பேசியதால் காலா படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது எனப் பல கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும், இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என  உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காலா படத்தை தடை செய்ய  எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி இந்தப் படத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

பல தடைகளை கடந்து இன்று இந்தியா முழுவதும் வெளியான காலா படத்தைக் காண அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குங்களில் கூடத்தொடங்கினர். தோரணம், பட்டாசு, கட் அவுட், பால் அபிஷேகம் எனத் திரையரங்கமே களைக்கட்டியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பா.இரஞ்சித், ``காலா படம் ரஜினியின் அரசியலுக்கான படம் இல்லை. அது மக்கள் பிரச்னையை எடுத்துரைக்கும் படம். பல தடைகளை தாண்டி வெளியான படத்துக்குப் பல நேர்மறையான கருத்துகள் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காலா படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் எண்ணம் தற்போது இல்லை. ஃபேஸ்புக்கில் இந்தப் படத்தை லைவ்(   Live) செய்த தம்பிக்கு நன்றி.”  எனச் சிரித்தபடியே கூறினார். மேலும் நீங்கள் இயக்குநரா? அரசியல்வாதியா? என  நிருபர்கள் கேட்ட கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல் `நான் அரசியல்வாதி’ என பதிலளித்தார்.