ஊருக்குள் புகுந்த காட்டுமாடு! - விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை

ஊருக்குள் புகுந்த காட்டுமாடு! விரட்ட முடியாமல் தவிக்கும் வனத்துறை.!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது துரைராஜபுரம் காலனி. இப்பகுதியில் சோளம், கம்பு போன்ற பயிர்கள் பயிரிடப்படும். இன்று அதிகாலை இரண்டு காட்டுமாடுகள் சோளக்காட்டுக்குள் புகுந்துள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டு மாடுகளை வனத்துக்குள் விரட்ட முயற்சி செய்துவருகின்றனர். ஆனால், பல மணி நேரம் போராடியும், மாடு குடியிருப்புப் பகுதியை நோக்கியே நகர்ந்து வருகிறது. வனத்துறையுடன் அப்பகுதி மக்களும் இணைந்துகொண்டு காட்டு மாடுகளை வனத்துக்குள் விரட்ட முயற்சி செய்துவருகின்றனர்.

அதன் அருகில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காட்டுமாடு கிணற்றுக்குள் விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி மலையடிவார விவசாயப் பகுதி மற்றும் குடியிருப்புக்குள் நுழைவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், தேவாரம் பகுதியில் ஒற்றை காட்டு யானையான மக்னா பல மாதங்களாக அப்பகுதியில் முகாமிட்டு விவசாய நிலங்களை அழித்துவருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான தென்னை மரங்களையும், கிழங்குப் பயிர்களையும் அழித்துள்ளது. மக்னாவுக்கு சிறுவன் உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், மக்னாவை விரட்ட அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு வனவிலங்குகளால் தொடர் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!