வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (07/06/2018)

கடைசி தொடர்பு:14:04 (07/06/2018)

`இங்கே டாக்டர்கள் இல்லை!’ - பரிதாபமாக உயிரிழந்த மாணவி

மாணவ, மாணவிகள் அவரை அருகில் உள்ள கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்பொழுது பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மகாலெட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

விருத்தாசலம் அருகே பள்ளி மாணவி மயக்கம் போட்டு விழுந்து அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் இல்லாததால் மாணவி இறந்ததாகக் கூறி பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலை மறியல் செய்தனர். இதனால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே உள்ள சு.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (45). இவர் விவசாயக் கூலித் தொழிலாளி. இவரின் மகள் மகாலட்சுமி(13), இவர் கம்மாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 9 மணிக்கு மகாலெட்சுமி பள்ளிக்கு வந்துள்ளார், பின்னர் கழிவறைக்குச் சென்றவர் அங்கேயே மயங்கி  விழுந்துள்ளார். உடன் சக மாணவ, மாணவிகள் அவரை அருகில் உள்ள கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்பொழுது பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மகாலெட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 

 விருத்தாசலம்

`டாக்டர்கள் யாரும் இல்லை, அவர்கள் இருந்து உரிய சிகிச்சை அளித்திருந்தால் மாணவி மகாலட்சுமியைக் காப்பாற்றியிருக்கலாம்’ எனக் கூறி  பள்ளி மாணவ, மாணவிகளும், கிராம மக்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கம்மாபுரம் மற்றும் விருத்தாசலம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்கள். இந்த மறியலால் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.