வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (07/06/2018)

கடைசி தொடர்பு:14:24 (07/06/2018)

காலா திரையரங்கில் மெளன அஞ்சலி! - தூத்துக்குடி ரஜினி ரசிகர்களின் மனநிலை

தூத்துக்குடியில் ரசிகர்களின் வழக்கமான ஆரவாரம், கொண்டாட்டம் ஏதுமின்றி ரஜினி நடித்த `காலா' திரைப்படம்  திரையிடப்பட்டது. படம் தொடங்குவதற்கு முன்பு ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். 

காலா

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி, ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுறுவலால்தான் கலவரம் வெடித்தது என, போலீஸாரின் துப்பாக்கிச் சூடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ரஜினி தெரிவித்ததால் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  

காலா

தமிழகம் முழுவதும் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ரஜினியின் இந்தப் பேச்சைக் கண்டித்து `காலா' திரைப்படத்தை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தகவல் வாட்ஸ்அப்களிலும் வைரலானது. இந்நிலையில், தூத்துக்குடியில் `காலா' திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 'காலா' திரைப்படம் இன்று காலை 9.47 மணிக்குத்  திரையிடப்பட்டது. திரைப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பு, ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமையில் ரசிகர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். 

காலா

இதைத்தொடர்ந்து `காலா' படம் திரையிடப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் கால திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும்  கண்டு மகிழ்ந்தனர். இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ``தலைவர் படம் ரிலீஸானாலே வாடிப்பட்டி மேளம், கேரளா செண்டா மேளம் முழங்க வெடி வெடிச்சு இனிப்பு வழங்கி திருவிழா போல சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடுவோம். 

கடந்த மாதம் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதால் தூத்துக்குடியே சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த நிலையில், ஆரவாரம் கூடாது. தலைவரும் இதை விரும்ப மாட்டார். படம் தொடங்குவதற்கு முன்பு, வீரமரணம் அடைந்த 13 பேரின் ஆத்மா சாந்தி அடைய ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினோம். 3 நாள்களுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில், இதேபோல அஞ்சலி நிகழ்வு நடக்கும். விசில் சத்தம் கூட கேட்காது." என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க