வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (07/06/2018)

கடைசி தொடர்பு:14:20 (07/06/2018)

சவுதியில் ரிலீஸான காலா! - அரபு நாட்டில் வெளியாகும் முதல் இந்தியப் படம்

சவுதி அரேபியா நாட்டில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது காலா.

காலா

இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடாக உள்ள சவுதி அரேபியாவில் 1970 வரை ஏராளமான சினிமா தியேட்டர்கள் இருந்தன. ஆனால், நாளடைவில் இது இஸ்லாமிய மரபுகளுக்கு எதிரானது என்று, இஸ்லாமிய மறுமலர்ச்சித் திட்டம் 1980-களில் தியேட்டர்களுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. அதனால் அங்குள்ள அனைத்துத் தியேட்டர்களும் மூடப்பட்டன. ஆனால், தற்போது புதிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பின் சல்மான், தான் பதவியேற்ற பிறகு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி சவுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதன் படி பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி, பெண்களுக்கான பல்வேறு சலுகைகள் போன்ற பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

அதன் படி இத்தனை ஆண்டுகளாகத் திரைப்படங்களே வெளியிடப்படாமல் இருந்த நாட்டில் முதல்முறையாக `பிளாக் பாந்தர்’ (Black Panther)படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது சவுதியில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ரஜினி நடித்து இன்று வெளியான காலா படம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியைக் காலா படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபில்ம்ஸ் (Wunderbar Films) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.