வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (07/06/2018)

கடைசி தொடர்பு:14:40 (07/06/2018)

``உயிரைப் பறிக்கும் நீட் எனும் மரணக் கயிற்றை அறுக்க வேண்டும்..!'' - வைகோ

 

வைகோ

நீட் தேர்வு தோல்வியால் தமிழத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வு பிரச்னைக்குத் தற்கொலை தீர்வல்ல என்று மருத்துவர்களும் கல்வியாளர்களும் அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``உயிரைப் பறிக்கும் நீட் எனும் மரணக் கயிற்றை நிரந்தரமாக அறுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ``இந்தியாவிலேயே பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்ணைப் பெற்று தேர்வு பெற்ற 91.1 தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் இந்தியாவில் 34 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி இறுதித் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற எண்ணற்றவர்கள் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களாக தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல நகரங்களிலும், உலகின் பல நாடுகளிலும் அற்புதமான மருத்துவச் சேவை செய்து வருகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்துப் பிள்ளைகள் நீட் தேர்வு எனும் மத்திய அரசின் நயவஞ்சகத் திட்டத்தால் மருத்துவப் படிப்புக்கு வாய்ப்புக் கிடைக்காமல், மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அனிதா, பிரதீபா எனும் இளம் தளிர்கள் தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டனர். இந்நிலையில், திருச்சி - சமயபுரம் டோல்கேட், பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தருகிறது. தமிழகத்தின் மாணவ - மாணவிகளே! ``வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்” என்ற நம்பிக்கையோடு கிடைக்கின்ற கல்வி வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். நீங்கள் உயிரை மாய்த்துக்கொண்டால் உங்கள் பெற்றோரும், உடன் பிறந்தோரும் நெஞ்சம் வெடித்துக் கதறுவார்களே என்பதை எண்ணிப் பாருங்கள்.

நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சொல்லி தமிழகச் சட்டமன்றத்தில் அ.தி.மு.க அரசு மசோதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது. மத்திய அரசு அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டது. ஆனால், மத்திய அமைச்சர்கள் கடந்த ஆண்டில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்ற பசப்பு வார்த்தைகளைக் கூறி மோசடி ஏமாற்று வேலையில் ஈடுபட்டனர். சமூகநீதிக்கு வேட்டு வைக்கும்  நீட் என்கின்ற சாபக்கேட்டைப் பயன்படுத்திக்கொண்டு, ``நீட் பயிற்சி மையங்கள் எனும் பணவசூல் மையங்கள்” காளான்கள் போல முளைத்துவிட்டன. நீட் தேர்வு எனும் மரணக் கயிற்றை அறுத்து எறிய சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து பெற்றோரும், மாணவர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். அதற்கான அறப்போர் மூள வேண்டும். சுபஸ்ரீயை இழந்து கண்ணீரில் தவிக்கும் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கவலியுறுத்தியுள்ளார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க