வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (07/06/2018)

கடைசி தொடர்பு:18:33 (08/06/2018)

'காலாவுக்கு கபாலி அளவுக்கு புரமோஷன் வேண்டாம்!'  - தனுஷுக்கு வழிகாட்டிய ரஜினி #VikatanExclusive

' கபாலி அளவுக்குக் காலாவையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார் தயாரிப்பாளர் தனுஷ். ஆனால், படத்தை விளம்பரப்படுத்துவதை ரஜினி விரும்பவில்லை' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள். 

ரஜினி

`காலா' திரைப்படம் தொடர்பாக வெளிவரும் தகவல்களால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். 'கபாலி அளவுக்குக் காலாவையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார் தயாரிப்பாளர் தனுஷ். ஆனால், படத்தை விளம்பரப்படுத்துவதை ரஜினி விரும்பவில்லை' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள். 

பா.இரஞ்சித் இயக்கத்தில் இன்று வெளியான `காலா' திரைப்படம், சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ' என்னுடைய தந்தை திரவியம் நாடார் தொடர்பான கதை இது. படத்தின் ட்ரெயிலரில் வரும் காட்சிகளும் அவரைத்தான் நினைவுபடுத்துகின்றன. ஆனால், 'இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை' எனக் கூறிவிட்டார் இரஞ்சித். எனவே, 101 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்குப் போட்டிருக்கிறோம்' என அதிர வைத்தார் ஜவஹர் என்பவர். இதன்பிறகு, 'கர்நாடகாவிலும் காலாவை வெளியிட மாட்டோம்' என கன்னட அமைப்புகள் களத்தில் இறங்கின. 'காலா படத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' என கர்நாடக உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதற்குப் பதில் அளித்த முதல்வர் குமாரசாமி, ' நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவது ஒரு முதல்வரின் கடமை. ஆனால், இப்படிப்பட்ட சூழலில் காலாவை வெளியிடாமல் இருப்பதே நல்லது' எனப் பேட்டி அளித்தார்.

தனுஷ்இதை எதிர்பார்க்காத ரஜினி, ' காவிரி பிரச்னையில் நான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்க முடியாது. கர்நாடகாவில் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை' என தன்னைத் தேடி வந்து பேசிய கன்னட நடிகர் ஒருவரிடம் உறுதியாகத் தெரிவித்தார். இந்நிலையில், படத்தின் வெற்றி தொடர்பாக வெளிவரும் தகவல்களால் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் ரஜினி. படம் வெளிவருவதற்கு முன்னதாக, தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷிடம் அவர் பேசிய விவரங்களை நம்மிடம் தெரிவித்தார் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர். 

`` தொடக்கத்தில் இருந்தே படம் நல்லபடியாக ஓடும் என்பதில் நம்பிக்கையுடன் இருந்தார் ரஜினி. முழு படத்தையும் பார்த்த பிறகு, தயாரிப்பாளராக மிகுந்த உற்சாகத்தில் இருந்தார் தனுஷ். உடனே ரஜினியை சந்தித்துப் பேசியவர், ' சினிமாரீதியாக கலைப்புலி தாணு கபாலிக்குச் செய்த விளம்பரம் போல, காலாவையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். பெரிய அளவுக்கு விளம்பரம் செய்யலாம். இதற்காக சில அவுட்சோர்ஸிங் நிறுவனங்களை அணுகலாம் என நினைக்கிறேன்' எனக் கூற, இதற்குப் பதில் கொடுத்த ரஜினி, ' நோ...நோ...படத்துக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை. கபாலி படம் அளவுக்குப் படத்தைப் புரமோட் செய்ய வேண்டாம். படத்தின் மீதும் அதன் கன்டன்ட்(உள்ளடக்கம்) மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற படங்கள் நிச்சயமாக ஓடும்' என விவரித்தவர், 

' கபாலி படத்தில் தலித் அடையாளத்தைக் காட்டினோம். இந்தப் படத்தில் எந்த அடையாளத்தையும் காட்டாமல் ஒரு தமிழராக பொது அடையாளத்தோடு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் படங்களிலேயே உலகம் சுற்றும் வாலிபனைவிட உரிமைக்குரல் படம்தான் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. எம்.ஜி.ஆரே இயக்கிய பிரமாண்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். ஆனால், உரிமைக்குரல் படத்தில் இயக்குநர் ஸ்ரீதரோடு சேர்ந்து காதல், அண்ணன்-தம்பி சென்டிமெண்ட் என அசர வைத்திருப்பார் எம்.ஜி.ஆர். இந்தக் கலவையின் காரணமாகப் படம் வெற்றி பெற்றது. ஸ்ரீதர் ப்ளஸ் எம்.ஜி.ஆர் காம்பினேஷனாக படம் இருந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. காலா படத்திலும் இரஞ்சித் பெரிய வேல்யூவாக இருக்கிறார். வழக்கமான என்னுடைய படங்களைவிடவும் இந்தப் படம் பெரிய அளவுக்குப் போகும். படம் வெளியான பிறகு, மேக்ஸிமம் எந்தளவுக்கு விளம்பரப்படுத்த முடியுமோ அப்போது செய்யுங்கள்' என சிரித்தபடியே கூறிவிட்டார். ரஜினியின் இந்தக் கருத்தை தனுஷும் ஏற்றுக்கொண்டார். இனி படத்தின் விளம்பர வேலைகள் தொடங்க இருக்கின்றன" என்றார் விரிவாக.