வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (07/06/2018)

கடைசி தொடர்பு:11:55 (08/06/2018)

அமித் ஷாவின் 'ஆபரேஷன் வடதமிழகம்'! - பா.ம.கவுக்கு பா.ஜ.கவின் செக் #VikatanExclusive

' பா.ம.கவில் இருந்து ஓரம்கட்ட முக்கியத் தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைத்திருக்கிறார் அமித் ஷா. குரு மரணத்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

அமித் ஷா-மோடி

ன்னிய சமூக மக்களுக்காக அமித் ஷா நடத்தவிருக்கும் மாநாடு, பா.ம.க வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. ' பா.ம.கவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட முக்கியத் தலைவர்களை எல்லாம் ஒருங்கிணைத்திருக்கிறார் அமித் ஷா. குரு மரணத்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ.க பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

சென்னை, தீவுத்திடலில் 'மந்திரமாலை' என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு ஒன்றை ஜூலை மாதம் நடத்த இருக்கிறார் அமித் ஷா. இந்த மாநாட்டில் வன்னியர் சங்கப் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். வடமாவட்டங்களைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த மாநாடு குறித்து ட்விட்டரில் கலாய்த்த மருத்துவர் ராமதாஸ், ' வட தமிழகத்தை வளைக்க அமித்ஷா அடுத்த மாதம் சென்னையில் மாநாடு நடத்துகிறாராம். டெல்லியில் தொடங்கி பஞ்சாப், மிசோரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் மாநாட்டுக்கு கூட்டம் சேர்க்க ஆட்கள் அழைத்து வரப்படுகிறார்களாம்' எனக் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து பா.ஜ.கவில் எந்தவித அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை.

வானதி சீனிவாசன்இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், `` மந்திரமாலை என்பது வன்னியர்களின் தாயாகப் பார்க்கப்படுகிறது. உணர்வுரீதியாக அவர்களை ஒன்றிணைக்க இந்த மாநாட்டை நடத்துகிறோம். பா.ம.கவில் இருந்து விலகி, ஏராளமானோர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ ரவிராஜ் உட்பட ஏராளமான சீனியர்கள் எங்களை நோக்கி வந்துள்ளனர். அதேபோல், எங்கள் கட்சியிலும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இருக்கின்றனர். அனைத்து சமுதாயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொடர் மாநாடுகளை நடத்தி வருகிறோம். 

கடந்த மாதம் விழுப்புரத்தில் எஸ்.சி அணி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்குப் பட்டியலினத்தைச் சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் வந்திருந்தனர். ' எஸ்.சி மக்களுக்கு பா.ஜ.க அரசு என்ன செய்தது?' என்பதை விரிவாக விவரித்தோம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராக யாரையும் தூண்டிவிடத்தான் கூடாது. மற்றபடி, சமூகங்களை ஒன்றிணைப்பதில் எந்தத் தவறும் இல்லை. சமுதாயங்களுக்குள் ராமதாஸ்வன்முறையை ஏவிவிடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அந்தந்த சமுதாயத்தின் பாரம்பர்யப் பெருமைகளை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்காகத்தான் மாநாடுகளைக் கூட்டுகிறோம். ஒவ்வொரு சமுதாயத்துக்குள்ளும் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் நினைப்பது இயல்பானது. அதற்கு இதுபோன்ற மாநாடுகள் துணை நிற்கும்" என்றார் உறுதியாக.

அமித் ஷா நடத்தும் மாநாடு குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர், " தமிழ்நாட்டில் வன்னிய சமூகத்துக்கென்று 13 சதவிகித வாக்குவங்கி இருக்கிறது. வன்னியர்களுக்குள் நிறைய சங்கங்கள் இருக்கின்றன. பா.ம.கவில் இருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளுக்கு எந்தக் கட்சியும் சரியான அங்கீகாரத்தை அளிக்கவில்லை. அரசியல்ரீதியாக புறக்கணிக்கப்பட்டதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு, உயர் பதவி போன்றவற்றில் உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்ற பேச்சு, அந்த சமூகத்து இளைஞர்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

இதன் ஒருபகுதியாக, பா.ம.கவைவிட்டு வெளியேறிய முக்கிய நிர்வாகிகளை எல்லாம் ஒருங்கிணைக்க இருக்கிறார் அமித் ஷா. தீவுத்திடல் மாநாட்டில் இவர்களைக் கௌரவப்படுத்த இருக்கிறார். இந்தப் பிரமுகர்களுக்குப் பா.ஜ.கவில் உயர் பொறுப்பு அளிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இப்படியொரு முயற்சி நடப்பதை மருத்துவர் ராமதாஸ் ரசிக்கவில்லை. அதன் விளைவாகத்தான் ட்விட்டரில் பதிவு போட்டார். அதேபோல், பா.ம.கவில் அன்புமணியை முன்னிலைப்படுத்துவதையும் வன்னியர் சங்கத்தின் உள்ள சிலர் விரும்பவில்லை. இதையெல்லாம் முன்வைத்துத்தான் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க விரும்புகிறார் அமித் ஷா. இந்த முயற்சிகளுக்குப் பா.ம.க தரப்பில் இருந்து எதிர்வினை கிளம்பினால், அன்புமணி மீதான இந்தூர் மருத்துவக் கல்லூரி அனுமதி வழக்கின் பிடி இறுகும்" என்றார் விரிவாக.