வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (07/06/2018)

கடைசி தொடர்பு:16:27 (07/06/2018)

நீட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 1337 பேர்... ஆனால், 10 பேருக்கு மட்டுமே மெடிக்கல் சீட்?!

நீட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 1337 பேர்... ஆனால், 10 பேருக்கு மட்டுமே மெடிக்கல் சீட்?!

அரசுப் பள்ளியில் படித்த 1337 பேர் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள் என அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை. ஆனால், இதில் எத்தனை பேருக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்கும் என்பது மதிப்பெண் விவரத்தைப் பொறுத்துதான் தெரியும் என்பதால் நீண்டுகொண்டே போன சஸ்பென்ஸ் இப்போது உடைந்திருக்கிறது. 

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்கிற விவரத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில், "இந்த ஆண்டு பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்" என்கிறார்கள் கல்வியாளர்கள். ஆனால், இதில் எத்தனை பேருக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதுதான் பெரிய கேள்வி.

நீட்

மதிப்பெண் விவரங்களின்படி பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் 300-க்கும் கூடுதலான மதிப்பெண்ணைப் பெற்றிருக்கின்றனர். கடந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கையில் 360 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதால் இந்த ஆண்டு 300-க்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்ற ஒன்றிரண்டு பேருக்கு அரசு  மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 

இதரப் பிரிவில் 35-க்கும் அதிகமானோர் 250 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கின்றனர். கடந்த ஆண்டு 5 மாணவர்களுக்கு மட்டும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. இதில் இரண்டு பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலும், மூன்று மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியிலும் இடம் கிடைத்தது. இதே போல் இந்த ஆண்டும், 35-ல் ஏழு அல்லது எட்டு மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.

கடந்த ஆண்டு, 210 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாகப் பெற்ற தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இந்த மதிப்பெண்ணுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும். இதில் இரண்டு பேர் 300-க்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருப்பதால் இவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் 200-க்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். கடந்த ஆண்டு பழங்குடி பிரிவில் 210 மதிப்பெண் வரை அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு
210-க்குக் கூடுதலாக மதிப்பெண் பெற்றவர்கள் யாருமில்லை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தமிழ்வழிக் கல்வியில் படித்த முத்து மணிகண்டன் என்ற மாணவர் 233 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த மாணவன் அரசு வழங்கிய ஒரு மாதச் சிறப்புப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ளார். அவரிடம் பேசியபோது, "அரசுப் பயிற்சி வகுப்பின்மூலம், நீட் தேர்வு குறித்த பயம் விலகி, நீட் தேர்வு குறித்த புரிதல் ஏற்பட்டது. நீட் தேர்வு எழுதிய பின்னரே, பிளஸ் 2 தேர்வுக்கும், நீட் தேர்வுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் ஒன்  படிக்கும்போதே பயிற்சியை ஆரம்பித்தால் என்னைப்போல் நிறைய மாணவர்கள் பயன்பெற முடியும்" என்றார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த கிராஷிகா நீட் தேர்வில் 263 மதிப்பெண் பெற்றுள்ளார். இவருக்கும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இவரும் நீட் அரசு பயிற்சி மையத்தில் படித்தவர். அவர், "அரசு நீட் பயிற்சி மையம் மிகவும் உதவிகரமாக இருந்தது. தைரியத்தைக் கொடுத்தது. பயிற்சி மையத்தில் வகுப்புகளை விரைவாக எடுத்தார்கள். கொஞ்சம் காலமிருந்தால் இன்னும் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்கலாம். என்னுடைய பயிற்சி மையம் விருதுநகரில் அமைந்திருந்தால் 35 கி.மீ., பயணிக்க வேண்டியதிருந்தது. சிவகாசியில் இருந்தால் இன்னமும் பயனுள்ளதாக இருந்திருக்கும்" என்றார். 

நீட் தேர்வு

பள்ளி ஆசிரியர்களிடம் பேசிய போது, "கடந்த ஆண்டு மாணவர்கள் முழுமையாக 11-ம் வகுப்பு பாடத்தைப் படிக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு பிளஸ் டூ படிப்பவர்கள் 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை எழுதியவர்கள் என்பதால் நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்வர். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியிலும், அரசுப் பணியிலும் இட ஒதுக்கீடு என்ற முறையைக் கொண்டுவந்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்