வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (07/06/2018)

கடைசி தொடர்பு:15:24 (07/06/2018)

கர்நாடகாவில் ரிலீஸானது `காலா' - தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற டிக்கெட் விற்பனையை தொடர்ந்து ரஜினி நடித்த `காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியானது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற டிக்கெட் விற்பனையைத் தொடர்ந்து ரஜினி நடித்த `காலா' திரைப்படம்  கர்நாடகாவில் வெளியானது.

காலா

 

பெரும் எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இடையே இன்று பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த `காலா' திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. ரஜினிகாந்த் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கு ஆதரவான கருத்து தெரிவித்ததால், காலா படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என கன்னட அமைப்புகள் வரிந்துகட்டி நின்றன.

மேலும், சட்டம்- ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்தை திரையிட மறுப்பு தெரிவித்தது. இதற்குத் தீர்வு காணும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காலா வெளியிடத் தடையில்லை என்றும் திரையரங்குகளுக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால், குறிப்பிட்ட சில விநியோகஸ்தர்கள் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட முன்வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநியோகஸ்தர் அலுவலகம் பெங்களூரில் சூறையாடப்பட்டது.

கர்நாடகாவில் காலா வெளியாகுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தநிலையில், மதியத்துக்குப் பின் திரைப்படத்துக்கு டிக்கெட் விற்பனை பெங்களூருவில் உள்ள மந்த்ரி மாலில் தொடங்கியது. மேலும் மந்த்ரி மால் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து  அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மந்த்ரிமாலில் காலா திரைப்படம் வெளியானது.