`6 மாதம் நடையாய் நடந்ததுதான் மிச்சம்' - மாற்றுத்திறனாளி சகோதரர்களைக் கைவிட்ட மாவட்ட நிர்வாகம்

கிருஷ்ணகிரி அருகேயுள்ள கேரெட்டியைச் சேர்ந்த சகோதரர்கள், பரந்தாமனும் சகாதேவனும். மரபணுக் குறைபாடு காரணமாக வளர்ச்சி குன்றிக் காணப்படும் இவர்கள், சமீபத்தில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். நடையாய் நடந்தும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கலெக்டரிடம் கொடுத்த அவர்களின் மனுவிற்குப் பதில் கிடைக்கவில்லை. இதனால், மாவட்ட நிர்வாகத்தின்மீது இருந்த நம்பிக்கையையும் இழந்துவிட்டோம் என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள். 

சகோதரர்கள் பரந்தாமன், சகாதேவன்

அவர்களிடம் பேசினோம். ``கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்துள்ள கேரெட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதம்மாள்- பச்சையப்பன் இவர்களுக்கு முனியப்பன், மாரியப்பன், பெருமாள், பரந்தாமன், சகாதேவன் என 5 மகன்கள். வயதான தாய். தந்தை பச்சையப்பன், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். அண்ணன்கள் முனியப்பன், மாரியப்பனுக்குத் திருமணம் முடிந்து தனியாகச் சென்றுவிட்டனர். இப்போது, மற்றொரு அண்ணன் பெருமாளின் பராமரிப்பில் நாங்கள் இருவரும் படித்துவருகிறோம். மரபணுக் குறைபாடு காரணமாக சக மனிதர்களுக்குரிய வளர்ச்சி இல்லாமல் குள்ளமான மனிதர்களாக நானும் (பரந்தாமனும்), சகாதேவனும் இருக்கின்றோம். 

தம்பி சகாதேவன் இப்போதுதான் பிளஸ் 2 முடித்துள்ளான். நான் (பரந்தாமன்) பி.ஏ தமிழ் முடித்துவிட்டு சென்னை லயோலாவில் சினிமா சம்பந்தமான படிப்பை படிச்சிட்டு இருக்கிறேன். அண்ணன் பெருமாள், அப்பா அம்மாவையும் பாத்துகிட்டு எங்களையும் படிக்க வைக்க ரொம்பவும் சிரமப்படுறான். அதனால்தான், எனக்கும் தம்பி சகாதேவனுக்கும் அஞ்செட்டி டு ஒகேனக்கல் சாலையில் கேரெட்டி பஸ் ஸ்டாப்ல 3 சென்ட் நிலம் இருக்கு. அதோட மார்கெட் மதிப்பு இப்போ 5 லட்ச ரூபாய். அதுல கடை கட்டி வாடகை விட்டால், மாதா மாதம் வருமானம் கிடைக்கும் எங்க படிப்புச் செலவுக்குப் போதுமானதாக இருக்கும். எனவே, அதற்குத் தேவையான திட்ட ஆவணங்களை எல்லாம் தயார்செய்து வங்கியில் 10 லட்ச ரூபாய் லோன் கேட்டு, உதவி செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் மனு கொடுத்தோம். ஆனால், கடந்த ஆறு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நம்பிக்கையோடு வந்து சென்றதுதான் மிச்சம் எங்களின் கோரிக்கையை ஒரு வங்கிகூட ஏற்கவில்லை என்று மாவட்ட நிர்வாகம் பதில் கூறிவிட்டது. 

எங்களின் வேண்டுகோள் ஒன்றுதான், அரசாங்கத்திடம் உதவி கேட்கவில்லை, எங்களின் சொத்தின் மதிப்பைவிட ஒரு பங்கு கூடுதலாக வங்கிக் கடன்தான் கேட்கின்றேன். அரசாங்கம் எங்களின் மனுவைப் பரிசீலனைசெய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான் நாங்ளும் வாழ்கையில் படித்து முன்னேற முடியும். அதற்கு அரசாங்கம் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும்" என்று பரந்தாமனும் சகாதேவனும் கோரிக்கை வைக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!