கொள்ளையனுக்கு பொதுமக்கள் கொடுத்த மரணதண்டனை; தமிழக- ஆந்திர எல்லையில் பதற்றம் 

கொலை

  
ஊத்துக்கோட்டை பகுதியில் பைக்கில் சென்ற தம்பதியிடம் நகைகளைப் பறித்த கொள்ளைக் கும்பலை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கியதில், ஒரு கொள்ளையன் இறந்தான். 

திருப்பதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். வியாபாரம் செய்துவருகிறார். இவரின் மனைவி அனுராதா. இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள உறவினரின் திருமண விழாவுக்கு பைக்கில் சென்றனர். ஊத்துக்கோட்டை, புதுக்குப்பம் அருகே  பாஸ்கரையும், அனுராதாவையும் 15 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. கத்தியைக் காட்டி மிரட்டி, அனுராதா அணிந்திருந்த 10 சவரன் நகையைப் பறித்துக்கொண்டு, அந்தக் கும்பல் பைக்கில் தப்பியது. என்.எம்.கண்டிகைப் பகுதியில் பைக்கில் சென்ற  ஆசிரியர் ஜெயஸ்ரீ என்பவரிடமிருந்தும் 6 சவரன் நகையையும் கொள்ளைக் கும்பல் பறித்தது.

 நகையைப் பறிக்கொடுத்த பாஸ்கரும், அனுராதாவும் நடந்த சம்பவம்குறித்து சத்யவேடு திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்களுக்கு போன்மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் உறவினர்கள், கொள்ளை கும்பலைத் தேடினர். அப்போது, அவ்வழியாக கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பைக்கில் கூட்டமாக வந்தனர். அவர்களை பாஸ்கரின் உறவினர்கள் வழிமறித்தனர். அதில் ஏழு பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். 

 பிடிபட்ட ஏழு பேரையும் அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில், செங்குன்றம் கிராண்ட்லைன் பகுதியைச் சேர்ந்த ராஜி படுகாமடைந்தார். மற்றவர்கள், சத்தியவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். படுகாயடைந்த ராஜி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சத்தியவேடு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 போலீஸார் கூறுகையில், ``அனுராதாவிடமிருந்து நகைகளைப் பறித்தது ராஜி-யின் கூட்டாளிகள். ராஜி, செங்குன்றத்தைச் சேர்ந்தவர். அவரின் கூட்டாளிகள் பலர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இந்தக் கும்பல்தான் ஆசிரியை ஜெயஸ்ரீயிடமும் நகையைப் பறித்துள்ளது. பொதுமக்கள் தாக்கியதில்தான் ராஜி இறந்தாகத் தகவல் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. ராஜி-யின் கூட்டாளிகள் யார் என்றும் விசாரித்துவருகிறோம்" என்றனர். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!