வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/06/2018)

கடைசி தொடர்பு:16:30 (07/06/2018)

நீட் மரணம்; திருச்சி மாணவி குடும்பத்துக்கு தி.மு.க ரூ.2 லட்சம் நிதி

சுபஶ்ரீ

திருச்சி நெம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகப் பணியாற்றுகிறார். அண்ணா தொழிற்சங்கத்தின் திருச்சி கிளையின் தலைவராக இருக்கிறார். இவரது மகள் சுபஶ்ரீ, டாக்டர் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காகவே, துறையூரில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் தங்கி பிளஸ் டூ படித்தார். பிளஸ் டூ பொதுத்தேர்வில் 907 மார்க் எடுத்தார். நீட் தேர்வில் வெற்றிபெற்றால்தான் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர முடியும் என்பதால்,  தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சிறப்புப் பயிற்சியும் பெற்று, நீட் தேர்வு எழுதினார். ஆனால், அவர்  நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. நீட் தேர்வுக்குப் படித்ததால் பிளஸ் டூ பாடத்திலும் அதிக மார்க் எடுக்க முடியாமல்போனது. அதே நேரத்தில், நீட் தேர்விலும் தோல்வியடைந்தது சுபஶ்ரீ-யை மனவேதனையில் தள்ளியது. 

கே.என்.நேருஇதனால், கடந்த சில நாள்களாக நீட் தேர்வு பற்றியே அவர் பேசிவந்திருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள், அவரை தேற்றியுள்ளார்கள். மருத்துவக் கனவு சிதைந்துபோனதுகுறித்து தனது தொழிகளுடனும் சுபஶ்ரீ பேசியிருக்கிறார். இந்நிலையில், தனது பெற்றோர் கோயிலுக்குப் போன  நேரத்தில், நேற்றிரவு வீட்டில் தூக்குப் போட்டு சுபஶ்ரீ தற்கொலை செய்துகொண்டார். உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.  விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலையை அடுத்து திருச்சி மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்துகொண்டுள்ளது தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

இந்நிலையில், திருச்சி ஓயாமாரி சுடுகாட்டில் சுபஶ்ரீ உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. அந்த மாணவி குடும்பத்துக்கு தி.மு.க சார்பில்  ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இதையடுத்து, சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்த மாவட்டச் செயலாளரும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு, உடனடியாக கார் மூலம் திருச்சி புறப்பட்டார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ''மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சுபஶ்ரீ குடும்பத்தினரை நேரில் சந்தித்து தி.மு.க சார்பில் ஆறுதல் சொல்ல சென்னையிலிருந்து திருச்சி போய்க்கொண்டிருக்கிறேன். மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி கொடுக்கப்படும்'' என்றார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க