`அடேங்கப்பா... என்னவொரு வேகம்!' - முதல்வரை சீண்டும் ராமதாஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி செல்வதாக வந்த செய்தியை, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராமதாஸ்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற 100-வது நாள்  போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 13 பேர்  உயிரிழந்தனர். இது, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை முதல்வர் நேரில்  சந்திக்கவில்லை எனப் புகார் எழுந்தது. அதற்கு,  '144 தடை காரணமாகத்தான் அங்கு  செல்லவில்லை' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக  விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 9-ம் தேதி நேரில் சென்று ஆறுதல் கூற  உள்ளார்.

இந்நிலையில், முதல்வர் ஆறுதல் கூற உள்ளதாக வெளிவந்த செய்தியை வைத்து,  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து  பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ துப்பாக்கிச் சூட்டில்  கொல்லப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற, நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார்  எடப்பாடி பழனிசாமி : செய்தி -  பாதிக்கப்பட்ட மக்களை ஏதேனும் ஓர்  அரங்கத்தின் மூலையில் அடைத்துவைத்துவிட்டு, கால் கி.மீ தொலைவில்  இன்னொரு மூலையில் இருந்து ஆறுதல் கூறுவார் என நம்புவோம்!” என்றும்   “அடேங்கப்பா... என்னவொரு வேகம். பிள்ளையைக் கிள்ளிவிட்டு 19 நாள்கள் கழித்து  தொட்டிலை ஆட்டச் செல்கிறார்! ” எனவும் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!