`பயன்பாட்டுக்கே வரல.. பத்து லட்சம் போச்சு..!’ - புலம்பும் திருப்புல்லாணி மக்கள்

 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில், தண்ணீர் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட குழாய்கள் தண்ணீர் வரும் முன்னரே சேதமடைந்துபோனதால், அரசின் நிதி வீணடிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில், தண்ணீர் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்ட குழாய்கள், தண்ணீர் வரும் முன்னரே சேதமடைந்துபோனதால், அரசின் நிதி வீணடிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 தண்ணீர் தொட்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள் தண்ணீர் இன்றி வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்நிலையில், திருப்புல்லாணி ஒன்றியம் களரி ஊராட்சிக்கு உட்பட்ட சுமைதாங்கி, கீழச்சீத்தை ஆகிய கிராமங்களுக்கு களரியிலிருந்து தண்ணீர் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கென தலா 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரு கிராமங்களிலும் தரைதளத் தண்ணீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டன. மாவட்ட ஊராட்சி SFC 2017-18 திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், தண்ணீர் இன்னும் திறந்துவிடப்படவில்லை. 

ஆனால், அதற்குள்ளாகவே தண்ணீர் கொண்டு வர பதிக்கப்பட்ட குழாய்கள், தண்ணீர் சேமிப்புத் தொட்டிகள் ஆகியன சேதமடைந்து காணப்படுகின்றன. தண்ணீர் கொண்டுவருவதற்காக பதிக்கப்பட்ட குழாய்களை ஆழமாகப் பதிக்காமல், பெயரளவிற்கே பதிக்கப்பட்டுள்ளன. இதேபோல தண்ணீர் சேகரிப்புத் தொட்டிகளும் தரமின்றிக் கட்டப்பட்டுள்ளன. இதனால் சுமைதாங்கி, கீழச்சீத்தை கிராமங்களுக்குத் தண்ணீர் வந்து சேர்வதற்கு முன்னமே அதற்கான குழாய்களும், தொட்டியும் சேதமடைந்துள்ள நிலையில், இதற்கென அரசு ஒதுக்கிய ரூ 10 லட்சம் நிதியும் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பணியை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இரு கிராமங்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய, தரமான தொட்டி அமைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!