`போலீஸ் அடித்ததால்தான் இந்த முடிவு?’ - ராமேஸ்வரத்தை மிரளவைத்த தம்பதி தற்கொலை

 ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஈரோட்டைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் விஷம் கலந்த மதுவைக் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், ஈரோட்டைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் விஷம் கலந்த மதுவைக் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

ராமேஸ்வரத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்கள்

ஈரோடு மாவட்டம் பெரியதாசம்பூர் எஸ்.எஸ்.டி நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணன் (36). இவரது இரண்டாவது மனைவி காளீஸ்வரி. இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு ராமேஸ்வரம் வந்துள்ளனர். இங்குள்ள வீரபத்திரசுவாமி கோயில் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.

காலையில் நீண்ட நேரமாகியும் இவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகி, இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து, ராமேஸ்வரம் டிஎஸ்பி., மகேஷ் தலைமையில் அங்கு வந்த நகர் காவல் நிலைய போலீஸார் சரவணன் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கு இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து, அவர்களை சோதித்துப்பார்த்தபோது, அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.  மேலும், அவர்கள் தங்கியிருந்த அறையில் மது பாட்டிலும், விஷ மருந்தும் இருந்தது தெரியவந்தது. இதனால், இருவரும் மதுவில் விஷம் கலந்து குடித்துத்  தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


இதையடுத்து, இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், உடல் பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நகர போலீஸார், சரவணனின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சரவணன் மீது குடும்பப் பிரச்னை காரணமாக அவரது முதல் மனைவி ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் சரவணனை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து அடித்ததாகவும்,  அதனால் மனமுடைந்த சரவணனும் இரண்டாவது மனைவி காளீஸ்வரியும் ராமேஸ்வரம் வந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!